கிள்ளான் : இயல் இசை நாடக மன்றம், அருள் நுண்கலைப் பள்ளி, கலைவளர் கோயில் நாட்டியப்பள்ளி இணைந்து நடத்தும் தமிழ் இசை விழா எதிர்வரும் 30.12.2023 ஆம் நாள் தெங்கு கிளானாவில் அமைந்துள்ள கிள்ளான் நகராண்மைக் கழக இ-லைப்ரரி அரங்கில் மாலை மணி 6.30க்கு நடைபெறவிருக்கிறது.
இவ்விழாவில் திருமுறைப் பாடல்கள், தமிழிசைப் பாடல்கள், திருப்புகழ் பாடல்கள் என பல மனம் கவரும் படைப்புகள் இடம் பெறவுள்ளன. தமிழ் நாட்டில் மக்கள் தொலைக்காட்சி புகழ் சங்கீத கலாரத்னா ஐதராபாத் டாக்டர் பா. சிவா அவர்களுடன் அவர்தம் தகுதி வாய்ந்த மாணவர்கள் இவ்விசை விருந்தினை நமக்குப் படைக்கவுள்ளனர்.
பிண்ணனி இசைக் கலைஞர்கள் மிருதங்கம் தமிழ் நாடு தில்லைஸ்தானம் திரு ரா. சூரியநாராயணன், வயலின் இசைக்கலைமணி திரு. க. கார்த்திகேயன், குழல் திரு கேசவன், முகச்சங்கு திரு. இரா. இராஜசேகரன் ஆகியோர் இவ்விழாவினை மேலும் மெருகூட்டவுள்ளனர்.
சங்கீத கலாரத்னா ஐதராபாத் டாக்டர் பா. சிவா அவர்கள் பன்னிருதிருமுறை, திருப்பாவை, திருவெம்பாவை என தெய்வீக மனங்கமழும் திருப்பாக்களைப் பாடி மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர் என்பதை கலை உலகம் நன்கு அறியும்.
இசைத்துறையில் வளர்ந்து வரும் மாணவர்களுக்கு, இந்நிகழ்ச்சி ஒரு நல்ல அனுபவத்தையும் உந்துதலையும் தரும் என்பது உறுதி. இளம் தலைமுறையினருக்கு நம் மொழி, கலை, பண்பாட்டை உணர்த்தி நல்வழிக்காட்டி வருவதே இம் மூன்று இயக்கங்களின் அடிப்படை நோக்கமாகும். இந்நோக்கங்களின் அடிப்படையில் தமிழ்மொழி, கலை பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.
அது பொருட்டு, தரம் வாய்ந்த இந்நிகழ்ச்சியை முற்றிலும் இலவசமாகப் படைக்கவுள்ளனர். சரியாக மாலை மணி 6.30க்கு தேநீர் விருந்துடன் நிகழ்ச்சி தொடங்கி இசை அரங்கம் சரியாக 7.00 மணிக்குத் தொடங்கவுள்ளதால், உரிய நேரத்தில் வந்தருளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொள்கிறார்கள்.
காணக் கேட்கக் கிடைக்காத இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி தேன் சொட்டும் தமிழ் அருள் பாக்களைக் கேட்டு இன்புற அனைவரையும் அழைக்கிறார்கள்.