Home நாடு அன்வாரின் மன்னிப்பு – மஇகா ஏற்றுக் கொள்கிறது – சரவணன் அறிவிப்பு

அன்வாரின் மன்னிப்பு – மஇகா ஏற்றுக் கொள்கிறது – சரவணன் அறிவிப்பு

542
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : “கெ…ங்” என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக அன்வார் தெரிவித்திருக்கும் மன்னிப்பை மஇகா ஏற்றுக் கொள்வதாக மஇகா தேசியத்துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

“நாட்டின் மற்ற இனங்கள் குறித்து உணர்ச்சிகரமான விஷயங்களைப் பேசக் கூடாது என்பதை ஒரு பாடமாக இந்த விவகாரம் அனைவருக்கும் உணர்த்தியுள்ளது. அந்த வார்த்தையை உச்சரித்ததில் பிரதமருக்கு கெட்ட நோக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் பிரதமரின் வார்த்தை, கடந்த பொதுத் தேர்தலில் இன்றைய அரசாங்கம் ஆட்சி அமைக்கப் பெருமளவில் வாக்களித்த இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது” எனவும் சரவணன் தெரிவித்தார்.

“பிரதமர் ‘கெ…ங்ய என்ற வார்த்தையை உச்சரிக்கும் காணொலி சமூக ஊடகங்களில் மிக அதிக அளவில் பரப்பப்பட்டது. இந்திய சமுதாயத்தில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறிய சரவணன் இதன் தொடர்பில் அன்வாருக்கும் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மன்னிப்பு கேட்ட அன்வார்…

#TamilSchoolmychoice

கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 21) உப்சி என்றழைக்கப்படும் தஞ்சோங் மாலிமில் உள்ள, சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடலில் ‘கெலிங்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சனிக்கிழமையன்று (டிசம்பர் 23) மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ஹிக்காயாட் ஹாங் துவா என்ற நூலில் கையாளப்பட்டிருந்த அந்த சொல்லை மேற்கோள் காட்டு விதத்திலேயே தான் அதனைப் பயன்படுத்தியதாகவும் மற்றபடி ஓர் இனத்தை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் கோணத்தில் தான் அந்த சொல்லைப் பயன்படுத்தவில்லை என்றும் அன்வார் விளக்கமளித்தார்.

ஊடகத்தினருடன் (டிசம்பர் 23) நடத்திய சந்திப்பில் அன்வார்

அவ்வாறு மற்ற இனங்களை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் குணம் கொண்டவன் நானல்ல – அதை எப்போதும் செய்ய மாட்டேன் – எனவும் அன்வார் தெரிவித்தார்.

“ஹிக்காயாட் ஹாங் துவா என்னும் நூல் ஹாங் துவா என்ற மலாய் வீரன் பல்வேறு மொழிகளை அறிந்திருந்தார் என விவரிக்கிறது. மலாய், அரபு, சயாம் (தாய்லாந்து), கெலிங் ஆகிய மொழிகள் ஹாங் துவாவுக்கு தெரிந்திருந்தது என அந்த நூல் குறிப்பிட்டது. அதனைத்தான் நான் மேற்கோள் காட்டினேன். கலிங்கா என்ற மக்களின் மொழியைக் குறிக்கும் வகையில்தான் ‘கெலிங்’ என்ற வார்த்தை அந்நூலில் பயன்படுத்தப்பட்டது. இப்போது கெலிங் என்ற அந்த வார்த்தை பலராலும் தரக் குறைவாக விமர்சிக்கப் பயன்படுத்தப்படுவதால் நானும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை.அந்த நூலில் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதை மேற்கோள் காட்டவே நான் அதனைப் பயன்படுத்தினேன். இதனால் தவறானப் புரிந்துணர்வு ஏற்பட்டிருக்குமானால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாரையும் மட்டம் தட்டுவதோ, தரக் குறைவாக விமர்சிப்பதோ என் நோக்கம் கிடையாது. மற்ற இனத்தின் மீதோ மதத்தின் மீதோ தரக்குறைவான விமர்சனங்களை வைப்பது என்றால் அதைச் செய்யும் கடைசி மனிதனாகத்தான் நானிருப்பேன்” என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 23) பிரதமர் இல்லமான ஸ்ரீ பெர்டானாவில் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின்போது அன்வார் இந்த விளக்கத்தை அளித்தார்.

இதே நிகழ்ச்சியில் மற்ற மொழிகளின் தகாத வார்த்தைகளை தனக்கு பால்ய நண்பர்கள் கற்றுக் கொடுத்த சம்பவங்களையும் அன்வார் நகைச்சுவையாக விளக்கினார்.

“நான் பால்ய வயதில் வளர்ந்த புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் இந்திய, சீன நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் ‘பன்னிக்குட்டி’ போன்ற தகாத வார்த்தைகளையும், சில கெட்ட வார்த்தைகளையும் எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள். நானும் எந்தவித நோக்கமுமின்றி அந்த வார்த்தைகளை அவ்வப்போது பயன்படுத்துவேன். பின்னர் கமுந்திங் சிறையில் இருந்தபோது அங்கிருந்த மற்ற நண்பர்கள் நீங்கள் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினார்கள். அப்போது முதல் நான் இதுபோன்ற தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை” என்றும் அன்வார் விவரித்தார்.