(2 மே 2016ஆம் நாள் திங்கட்கிழமை அதிகாலை காலமான மஇகாவின் மூத்த தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஜி.பாசமாணிக்கத்தின் அரசியல் பயணத்தில் பின்னிப் பிணைந்திருந்த மஇகாவின் சில வரலாற்று சம்பவங்களை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் நினைவு கூர்ந்து எழுதும் கட்டுரை)
1977ஆம் ஆண்டு –
மஇகா வரலாற்றில் எப்போதுமே, நினைவுகூரப்படும் வரலாற்றுபூர்வ சம்பவங்களைக் கொண்ட ஆண்டு! மறைந்த டான்ஸ்ரீ பாசமாணிக்கம் அவர்களுக்கும் அந்த வரலாற்று சம்பவங்களில் ஒரு முக்கிய இடம் உண்டு.
1976இல் டான்ஸ்ரீ ஆதி நாகப்பனின் மறைவால், அவர் வகித்த மஇகா தேசியத் துணைத் தலைவர் பதவி காலியாக, 1977ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கட்சித் தேர்தலில் அப்போதைய தேசிய உதவித் தலைவரும், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான (டத்தோஸ்ரீ உத்தாமா) ச.சாமிவேலுவும், அப்போதைய தலைமைச் செயலாளராகவும் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினராகவும், துணையமைச்சராகவும் இருந்த (டான்ஸ்ரீ) சி.சுப்ரமணியமும் அந்த பதவிக்குப் போட்டியிட்டனர்.
அந்தத் தேர்தலில் அப்போதைய தேசியத் தலைவர் டான்ஸ்ரீ வி.மாணிக்கவாசகம், சுப்ரா என்று அழைக்கப்பட்ட சுப்ரமணியத்தைத்தான் வெளிப்படையாக ஆதரித்தார் என்பது மஇகா வட்டாரங்களில் தெளிவாகத் தெரிந்த ஒன்று.
அப்போது ஜோகூர் மாநில மஇகா தலைவராகவும், ஜோகூர் மாநில அரசில் ஆட்சிக் குழு உறுப்பினராகவும், மிகவும் பலம் வாய்ந்த தலைவராகவும், ஜோகூரில் ஏராளமான பேராளர்களை ஆதரவாளர்களாகக் கொண்டவராகவும் திகழ்ந்தவர் டான்ஸ்ரீ ஜி.பாசமாணிக்கம்.
மாணிக்கவாசகத்திற்கு நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் இருந்த மாநிலத் தலைவர்களில் பாசமாணிக்கமும் ஒருவர் என்பதால், அவரும் சுப்ராவையே ஆதரிப்பார் என அனைவரும் நம்பிக் கொண்டிருக்க,
தேர்தல் நெருங்கும் இறுதித் தருணங்களில் பாசமாணிக்கம், அவருக்கு மட்டும் தெரிந்த சில காரணங்களால், தேசிய துணைத் தலைவர் தேர்தலில் சாமிவேலுவைப் பகிரங்கமாக ஆதரிக்கும் முடிவை எடுத்தார்.
பாசமாணிக்கத்தின் ஆதரவுதான் சாமிவேலு அந்தத் துணைத் தலைவர் தேர்தலில் 26 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று என்பது மஇகா வட்டாரங்களின் உறுதியான முடிவு.
சாமிவேலுகூட, பல தருணங்களில், தனது அரசியல் வளர்ச்சிக்கும், போராட்டங்களிலும் உறுதுணையாக இருந்து தோள்கொடுத்தவர் பாசமாணிக்கம் என்றும் தனது தந்தை ஸ்தானத்தில் அவரை எப்போதும் வைத்துப் பார்ப்பதாகவும் பலமுறை கூறியிருக்கின்றார்.
ஒருமுறை பாசமாணிக்கத்தோடு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஜோகூர் மாநிலப் பேராளர் மாநாட்டிலேயே, பாசமாணிக்கம் நேரடியாக சாமிவேலுவைக் குறை கூற, வழக்கத்திற்கு மாறாக, மாநிலத் தலைவராக இருந்த பாசமாணிக்கத்திடம் சாமிவேலு பதிலுக்கு ஆத்திரம் கொள்ளாமல், மன்னிப்பு கேட்டுக் கொண்ட சம்பவங்களும் உண்டு.
அந்த அளவுக்கு பாசமாணிக்கத்திடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர் சாமிவேலு! நேற்று (3 மே 2016) செவ்வாய்க்கிழமை பாசமாணிக்கத்தின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார் சாமிவேலு!
பாசமாணிக்கம்-மாணிக்கவாசகம் இடையில் கருத்து வேறுபாடு
1977ஆம் ஆண்டு கட்சித் தேர்தலில் பாசமாணிக்கம் சாமிவேலுவை ஆதரித்ததையும், சுப்ரா துணைத் தலைவர் தேர்தலில் தோல்வியுற்றதற்கான காரணங்களில் அதுவும் ஒன்று என்பதாலும், அப்போது முதல், மாணிக்கவாசகத்திற்கும் (படம்) பாசமாணிக்கத்திற்கும் இடையில் அரசியல் ரீதியாக விரிசல் ஏற்பட்டது.
பாசமாணிக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 1978ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஜோகூர் மாநிலத்தின் பூலோ காசாப் சட்டமன்றத் தொகுதியில் (செகாமாட் வட்டாரம்) மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை பாசமாணிக்கத்திற்கு மாணிக்கா வழங்கவில்லை.
1969ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜோகூர், பத்து அன்னம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்ற பாசமாணிக்கம், 1974 பொதுத் தேர்தலில் பூலோ காசாப் சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருந்தார். ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.
1978ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஜோகூர் மாநிலத்தின் அசைக்கமுடியாத அம்னோ தலைவராகவும், மாநில மந்திரி பெசாராகவும் இருந்தவர் டான்ஸ்ரீ ஒத்மான் சாட் (Othman Saat)! இவர்தான் இன்றைக்கு பிரதமர் துறையின் அமைச்சராக இருப்பவரும் முன்னாள் அம்னோ புத்ரியின் தலைவருமான அசாலினா ஒத்மான் சாட்டின் தந்தையாவார்.
மாநில மந்திரிபெசாரான ஒஸ்மான் சாட்டுக்கும், பாசமாணிக்கத்திற்கும் மிகுந்த நெருக்கம் உண்டு. இதனால், பாசமாணிக்கத்திற்கு 1978 தேர்தலில் தொகுதி இல்லை என்றதும் வெகுண்டெழுந்த ஒத்மான் சாட், மாநில தேசிய முன்னணியைப் பொறுத்தவரை பாசமாணிக்கம்தான் வேட்பாளர் என்றும் பூலோ காசாப் தொகுதியில் அவர்தான் தேசிய முன்னணி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் முடிவெடுத்தார்.
இன்றைய பிரதமர் துறை அமைச்சர் அசாலினா ஒத்மான் சைட்டின் தந்தையும், முன்னாள் ஜோகூர் மந்திரி பெசாருமான டான்ஸ்ரீ ஒத்மான் சாட்…
இந்த அதிர்ச்சி தரும் முடிவால் ஆத்திரமடைந்த மாணிக்கவாசகம், தேர்தல் வேட்புமனுவுக்கு முதல் நாள் அப்போதைய பிரதமர் துன் ஹூசேன் ஓனைத் தொடர்பு கொண்டு, கட்சியின் வேட்பாளர்களை கட்சித் தலைமைத்துவம்தான் முடிவு செய்யவேண்டும், மந்திரி பெசார் முடிவு செய்ய முடியாது என்றும் இதுதான் தேசிய முன்னணியின் நடைமுறை என்றும் வாதிட்டார்.
அப்போது, ஜோகூரில் ஸ்ரீ காடிங் நாடாளுமன்றத் தொகுதியில் ஹூசேன் ஓன் போட்டியிட்டார். 1978ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்தான் ஹூசேன் ஓன் பிரதமராக இருந்து சந்திக்கும் முதல் தேர்தல்.
“பூலோ காசாப் தொகுதியில் எனது வேட்பாளர் எம்.கே.முத்துசாமி (அப்போதைய ஜோகூர் மாநில மஇகா செயலாளர்). அவர் வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்துடன் எனது பிரதிநிதி ஜோகூர் வந்து மாநில தேசிய முன்னணியிடம் சமர்ப்பிப்பார். முத்துசாமியை ஒத்மான் சாட் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றால், மஇகா வேட்பாளர்கள் யாரும் மற்ற தொகுதிகளில் நாளை தேர்தல் வேட்புமனுவை சமர்ப்பிக்க மாட்டார்கள்” என உறுதியுடன் மாணிக்கவாசகம் ஹூசேன் ஓனிடம் (படம்) கூறிவிட்டார்.
1978ஆம் ஆண்டு தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கு முதல் நாள் அப்போதைய மஇகா தலைமையக நிர்வாகச் செயலாளர் அ.துரைராஜ் (பின்னர் மாணிக்கவாசகத்தின் அரசியல் செயலாளராகவும், மஇகா யூனிட் டிரஸ்ட் நிர்வாகியாகவும் இருந்தவர்) முத்துசாமிதான் வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்தி, மாணிக்கவாசகம் வழங்கிய கடிதத்தை எடுத்துக் கொண்டு இரவோடு இரவாக ஜோகூர் பாரு விரைந்தார். உரியவர்களிடம் அந்தக் கடிதத்தைச் சேர்ப்பித்தார்.
பிரதமர் ஹூசேன் ஓனும், ஒத்மான் சாட்டுக்கு அதற்கேற்ப கட்டளையிட, வேறுவழியின்றி முத்துசாமியை பூலோ காசாப் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தார் ஒத்மான் சாட்.
ஆக, 1978 பொதுத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு முதலில் மாநில தேசிய முன்னணி வேட்பாளராக பாசமாணிக்கத்திற்குக் கடிதம் கொடுக்கப்பட்டு, பின்னர் வேட்புமனுத்தாக்கலுக்கு முதல் நாள் இரவோடு இரவாக, வேட்பாளர் மாற்றப்பட்டு முத்துசாமி பூலோ காசாப் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் முத்துசாமி.
ஆனால், இந்த அரசியல் சச்சரவுகள் காரணமாக, அப்போது முதல் பாசமாணிக்கம்-சாமிவேலு ஓர் அணியாகவும், முத்துசாமி-சுப்ரா இன்னொரு அணியாகவும், ஜோகூர் மஇகா இரண்டாகப் பிளவு கண்டது.
ஆட்சிக்குழுவில் மஇகாவுக்கு இடமில்லை
மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா பாசமாணிக்கத்தின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்த திங்கட்கிழமை (2 மே 2016) வருகை தந்தபோது…
தான் முன்மொழிந்த பாசமாணிக்கத்தை வேட்பாளராக நியமிக்காததால் ஆத்திரமடைந்த ஜோகூர் மந்திரி பெசார் ஒத்மான் சாட், மஇகா தலைமைத்துவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தேர்தல் முடிந்ததும் அமைக்கப்பட்ட மாநில ஆட்சிக் குழுவில் மஇகாவுக்கு பாரம்பரியமாக வழங்கப்பட்டு வந்த ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியை வழங்க மறுத்துவிட்டார்.
“சட்டமன்ற வேட்பாளர் என்பது கட்சியின் உரிமை என்றால், ஆட்சிக் குழுவில் இடம்பெறுவது யார் என்பதை முடிவு செய்வது மந்திரி பெசாராகிய எனது உரிமை” என்று கூறிவிட்டார் ஒத்மான் சாட்.
1978-1982 தவணைக் காலத்தில் ஜோகூர் மாநிலத்தில் ஆட்சிக் குழு பிரதிநிதித்துவம் இல்லாமலேயே மஇகா இயங்கியது. முத்துசாமியும் சாதாரண சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே தனது பணியைத் தொடர்ந்தார்.
1979ஆம் ஆண்டு நடந்த மாநிலத் தலைவருக்கான தேர்தலில் (அப்போதெல்லாம் மஇகாவில் மாநிலப் பதவிகளுக்கு தனியாகத் தேர்தல் நடைபெறும்) பாசமாணிக்கத்தை எதிர்த்துப் போட்டியிட்ட முத்துசாமியால் அவரை வெற்றி கொள்ள இயலவில்லை. பாசமாணிக்கம் மீண்டும் மாநிலத் தலைவராகத் தொடர்ந்தார்.
பாசமாணிக்கத்தின் நல்லுடலுக்கு, மஇகா தேசிய உதவித் தலைவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இறுதி அஞ்சலி செலுத்தியபோது….
இந்நிலையில், 1979ஆம் ஆண்டு அக்டோபரில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் காலமானதைத் தொடர்ந்து, சாமிவேலு இடைக்கால தேசியத் தலைவராக, பாசமாணிக்கத்தின் அரசியல் ஆதிக்கம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. இன்னும் சொல்லப் போனால், முன்பைவிட அதிக அளவில் தேசிய அரசியலிலும் பாசமாணிக்கம், ஆழமாக வேரூன்றி, ஜொலிக்கத் தொடங்கினார்.
தனது 60ஆம் வயதுகளில்தான் பாசமாணிக்கம் மாநில அரசியலில் இருந்து புறப்பட்டு, தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, பல்வேறு பதவிகளையும் அலங்கரித்தார் என்பதும் – அதுவும் தேசிய உதவித் தலைவர் போட்டிகளில்கூட தீவிரமாகப் போட்டியிட்டார் என்பதும் – அவரது அரசியல் பயணத்தில் கவனிக்கத்தக்க ஓர் அம்சம்.
1982 பொதுத் தேர்தலில் பாசமாணிக்கத்திற்கு சட்டமன்றத் தொகுதி இல்லை
தொடர்ந்து 1982ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாசமாணிக்கத்திற்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை அப்போது தேசியத் தலைவராகி விட்ட சாமிவேலு வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 1982 தேர்தலில் பூலோ காசாப் தொகுதி, மாநிலத் துணைத் தலைவராக இருந்தவரும், பாசமாணிக்கத்தின் நெருங்கிய ஆதரவாளர்களில் ஒருவருமான வி.ஆறுமுகத்திற்கு வழங்கப்பட்டது. 1982 பொதுத் தேர்தல் முடிந்ததும், 1978இல் கிடைக்காமல் விடுபட்டுப் போன, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி மீண்டும் மஇகாவுக்கு வழங்கப்பட்டது.
1982ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் மகாதீர் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் சந்தித்த முதல் தேர்தல் என்பதோடு, இந்தத் தேர்தலோடு ஒத்மான் சாட்டுக்கும் பதவி ஓய்வும் கொடுக்கப்பட்டது.
அப்போது மகாதீரின் கீழ் துணைப் பிரதமராக இருந்த மூசா ஹீத்தாம் – அவரும் ஜோகூர் மாநிலத்துக்காரர் என்பதால் – அவரது கை ஓங்கியிருந்த தருணம். அவரது அரசியல் செயலாளராக இருந்த டத்தோ அஜிப் அகமட் சட்டமன்றத்திற்கு நிறுத்தப்பட்டு பின்னர் ஜோகூர் மந்திரி பெசாராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்த புதிய-மாறிவிட்ட அரசியல் சூழலும், மஇகா மீண்டும் ஜோகூர் மாநிலத்தில் ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியைப் பெற்றதற்கான காரணங்களுள் ஒன்றாகும்.
தேசியப் பொருளாளர் – தேசிய உதவித் தலைவராக பாசமாணிக்கம்
தனது அரசியல் போராட்டங்களில் உறுதுணையாக இருந்த பாசமாணிக்கத்திற்கு, சாமிவேலு 1982ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை என்றாலும், அதன் பின்னர் அவருக்கு பல பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்தார்.
1995 வரை பாசமாணிக்கம் ஜோகூர் மாநிலத் தலைவராக நீடிப்பதற்கு, அவருக்கிருந்த சொந்த செல்வாக்கு ஒரு காரணம் என்றால், தேசியத் தலைவர் என்ற முறையில் சாமிவேலு அவருக்கு வழங்கிய ஆதரவுதான் மற்றொரு முக்கியக் காரணம்.
1994 முதல் 2000 வரை மஇகாவின் தேசியப் பொருளாளராக பாசமாணிக்கத்தை சாமிவேலு நியமித்தார். மாநிலத் தலைவர் பதவியை அவர் விட்டுக் கொடுத்தற்குப் பின்னர்தான், இந்த தேசியப் பொருளாளர் பதவி பாசமாணிக்கத்திற்கு வழங்கப்பட்டது.
பாசமாணிக்கத்திற்குப் பின்னர் நீண்ட காலமாக அவரிடம் செயலாளராகப் பணியாற்றி வந்த டத்தோ கே.எஸ்.பாலகிருஷ்ணன் ஜோகூர் மாநிலத் தலைவராக சாமிவேலுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இடைப்பட்ட காலத்தில், பாசமாணிக்கத்தை செனட்டராக நியமித்த சாமிவேலு, மஇகாவின் பொருளாதார அமைப்பான மைக்கா ஹோல்டிங்சின் தலைவராகவும் அவரை நியமித்தார். சாமிவேலு தலைமையில் இயங்கிய கேபிஜே எனப்படும் தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகத்திலும் பாசமாணிக்கம் இயக்குநராகத் தொடர்ந்து பதவி வகித்து வந்தார்.
தேசிய உதவித் தலைவராக…
1984ஆம் ஆண்டு கட்சித் தேர்தலில், தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு மூன்றாவது நிலையில் வெற்றி பெற்றார் பாசமாணிக்கம். பாசமாணிக்கம் உதவித் தலைவராகத்தேர்வு பெற பின்புலத்தில் பெரும் துணையாக இருந்தது அவர் சாமிவேலுவுக்கு நெருக்கமான ஆதரவாளர் என்ற நிலைப்பாடுதான்.
இதே தேர்தலில் அப்போது முதலாவது உதவித் தலைவராக டத்தோ கு.பத்மநாபனும், இரண்டாவது உதவித் தலைவராக எம்.ஜி.பண்டிதனும் தேர்வு பெற்றனர்.
சரித்திரப் பிரசித்தி பெற்ற 1987ஆம் ஆண்டு மஇகா உதவித் தலைவர் தேர்தல்
1987ஆம் ஆண்டின் கட்சித் தேர்தல் மஇகா சரித்திரத்தில் மற்றொரு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்த சில ஆண்டுகள் கட்சி மீண்டும் சாமிவேலு-சுப்ரா இருவருக்கும் இடையிலான தலைமைத்துவப் போராட்டத்தில் சிக்குவதற்கும் வழிவகுத்தது.
இந்த வரலாற்று சம்பவங்களிலும் பாசமாணிக்கத்தின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
1984ஆம் ஆண்டு மூன்றாவது நிலையில் தேசிய உதவித் தலைவராகத் தேர்வு பெற்ற பாசமாணிக்கம், 1987ஆம் ஆண்டு கட்சித் தேர்தலில் மீண்டும் தேசிய உதவித் தலைவராகப் போட்டியிட்டார். அப்போது அவர் ஜோகூர் மாநில மஇகா தலைவராகவும் இருந்தார்.
சாமிவேலுவுடன் – டான்ஸ்ரீ எம்.மகாலிங்கம்…
அதே தேர்தலில் அப்போதைய தலைமைச் செயலாளரும், சிலாங்கூர் மாநிலத் தலைவருமான டான்ஸ்ரீ எம்.மகாலிங்கம், நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் டத்தோ எம்.முத்து பழனியப்பன் ஆகியோரும் உதவித்தலைவர் போட்டியில் குதித்தனர். பாசமாணிக்கம், மகாலிங்கம், முத்து பழனியப்பன் ஆகிய மூவரும் ஓர் அணியாக இந்த உதவித் தலைவர் தேர்தலில் ‘டத்தோக்கள் கூட்டணி’ என்ற முத்திரையுடன், சாமிவேலுவின் ஆதரவாளர்களாகப் போட்டியிட்டனர்.
(குறிப்பு: முத்து பழனியப்பன் தற்போது மஇகாவிலிருந்து விலகி பிகேஆர் கட்சியில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்-பாசமாணிக்கத்தின் இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டு தனது பழைய நண்பருக்கு கண்ணீருடன் மரியாதை செலுத்தினார்)
மூன்று பேரும் மூன்று பெரிய மாநிலங்களின் மாநிலத் தலைவர்களாக இருந்ததால், ஒரே அணியாகப் போட்டியிடுவதன் மூலம் பேராளர்களின் வாக்குகளை அப்படியே ஒட்டுமொத்தமாக மூவரும் பெற முடியும் என்ற கண்ணோட்டத்தில் அரசியல் வியூகமும் வகுக்கப்பட்டது.
அப்போது நடப்பு உதவித் தலைவர்களாக இருந்தவர்கள் டத்தோ கு.பத்மநாபனும், எம்.ஜி.பண்டிதனும்! அவர்கள் இருவரும் சுப்ராவுக்கு ஆதரவாகச் அப்போது செயல்பட்டு வந்த தலைவர்கள்! இவர்களைத் தோற்கடிப்பதற்காகத்தான் ‘டத்தோக்கள் கூட்டணி’ உருவானது என்ற பிரச்சாரமும் அப்போது மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.சுப்பிரமணியமும் (படம் – 1990 முதல் 1995 வரை செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த இவர் – பின்னர் மஇகாவிலிருந்து வெளியேறி பிகேஆர் கட்சியில் இணைந்து விட்டார்), உதவித் தலைவர் தேர்தலில் குதிக்க, பத்மா, பண்டிதன், எஸ்.எஸ்.சுப்ரா ஓரணியாகவும், மகாலிங்கம், பாசமாணிக்கம், முத்து பழனியப்பன் ஆகியோர் மற்றொரு எதிர் அணியாகவும் 1987 கட்சித் தேர்தலில் போட்டியிட்டனர்.
அந்தப் போட்டியில், டத்தோ பத்மா, பண்டிதன், எஸ்.எஸ்.சுப்ரா மூவரும் உதவித் தலைவர்களாக முறையே வெற்றிபெற, மகாலிங்கம், பாசமாணிக்கம், முத்து பழனியப்பன் அணியினர் மூவரும் தோல்வியடைந்தனர்.
இந்தத் தோல்வி அப்போது சாமிவேலுவின் தோல்வியாகப் பார்க்கப்பட்டு, அதன்பின்னர், சாமிவேலு மேற்கொண்ட நடவடிக்கைகளும், கட்சியில் ஏற்பட்ட சம்பவங்களும் இன்னொரு தனிக்கதை!
பாசமாணிக்கம் – அவரது மனைவி சரசா…
பாசமாணிக்கத்தின் மனைவி புவான்ஸ்ரீ சரசா பாசமாணிக்கம் மஇகா மகளிர் தலைவியாகவும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் கட்சிப் பணியில் இருந்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்க மற்றொரு தகவல்.
இவ்வாறாக, மஇகா வரலாற்றோடு பின்னிப்பிணைந்த 94 வயதான பாசமாணிக்கத்தின் அரசியல் பயணம் திங்கட்கிழமை (2 மே 2016) நிகழ்ந்த அவரது மரணத்துடன் ஒரு நிறைவுக்கு வந்துள்ளது.
மேடைகளில் சரளமாக, அழகான தமிழில் உரையாற்றும் நாவன்மை –
முதுமை தழுவிய தருணங்களிலும் நேர்த்தியாக உடையணிந்து கட்சி நிகழ்ச்சிகளில் வலம் வந்த அவரது கம்பீரம் –
நியாயமில்லாத, தனக்கு சரியெனப் படாத விஷயங்களை மேடையில் பகிரங்கமாக எடுத்துரைக்கும் அவரது துணிவான – உறுதியான அரசியல் நிலைப்பாடு –
தன்னை விட இளைய வயதினரோடு உரையாடும்போதும், அவர்களுக்கு மரியாதை கொடுத்து, பண்புடன் பேசும் அவரது பணிவு –
இப்படியாக பல்வேறு காரணங்களுக்காக பாசமாணிக்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு மஇகாவினரால் என்றும் நினைவில் கொள்ளப்படுவார்.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!
-இரா.முத்தரசன்