கோலாலம்பூர் – நட்பு ஊடகமான பேஸ்புக், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள கேஎல் செண்ட்ரலில், மலேசியாவிற்கான தனது அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளது.
“இன்று அலுவலகம் திறக்கப்பட்டது மலேசியாவிலுள்ள பேஸ்புக் நிறுவனத்திற்கு ஒரு மைல் கல்லாக இருக்கும். மலேசியர்களுக்கும், அவர்கள் சார்ந்துள்ள வர்த்தகங்களுக்கும் உதவியாக இருந்து அதை அர்த்தமுள்ளதாக மாற்ற கடமைப்பட்டுள்ளோம்” என்று தென்கிழக்கு ஆசியாவிற்கான பேஸ்புக் நிர்வாக இயக்குநர் கென்னெத் பிஷாப் தெரிவித்துள்ளார்.
“மலேசியாவிலுள்ள எங்களது குழு, இன்றைய கைப்பேசியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை இணைத்து இது வரைக் கண்டிராத வாய்ப்பை வழங்கி வர்த்தகத்தை மேம்படுத்த உதவுவதில் முழுமூச்சாக உள்ளார்கள்.” என்றும் கென்னெத் கூறியுள்ளார்.
டிஎன்எஸ் என்ற ஆய்வுக்குழு அண்மையில் வெளியிட்ட கருத்துக் கணிப்பின் படி, 94% மலேசியர்கள் பேஸ்புக் மூலமாக பொருட்களையும், அதன் சின்னங்களையும் அறிந்து கொள்கிறார்கள்.
அவற்றில், 62% பேர், தாங்கள் அறிந்து கொண்ட பொருட்களை வாங்குகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே, நட்பு ஊடகங்களில் 18 மில்லியனுக்கும் மேல் மலேசியர்கள் இயங்கி வருகின்றார்கள். அவற்றில் 6.5 மில்லியன் மக்கள் பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான இண்ஸ்டாகிராமில் இயங்குகிறார்கள்.
அனைத்துலக அளவில் பேஸ்புக்கில் அதிக நண்பர்கள் கொண்டிருப்பதில் மலேசியர்கள் 10-வது தரவரிசையில் உள்ளனர்.
இந்நிலையில், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பேஸ்புக்கின் மலேசிய அலுவலகம், நிக்கோல் டான் தலைமையில் செயல்படவுள்ளது. இதற்கு முன்பு அவர் வால்டர் தாம்சன் மலேசியா என்ற விளம்பர நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.