ஜோர்ஜ் டவுன் – நேற்று பிற்பகல் ஐந்து ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் இல்லத்திற்கு வருகை தந்தது, அவர் மீது நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாகத்தானே தவிர, அப்போது அவரது இல்லத்தில் அதிரடிப் பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிம் குவான் எங் வாங்கிய பங்களா மீதான விசாரணை தொடர்பில் நேற்று அவரது இல்லத்தில் அதிரடிப் பரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
அதனைத் தொடர்ந்து லிம்மின் வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ, லிம் குவான் எங் வீட்டில் ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடி பரிசோதனை வேட்டை நடத்தியது என்ற தகவலில் உண்மையில்லை என அறிவித்துள்ளார்.
அதிரடிப் பரிசோதனை (raid) என்றால் முன்கூட்டியே தெரிவிக்காமல் வருவதுதான் என்றும், நேற்றைய சம்பவத்தில் காலை 10.00 மணிக்கு லிம் குவான், பினாங்கிலுள்ள ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார் என்றும் அங்கு தனது மனைவி பெட்டி சியூவுடன் சென்ற அவர் வாக்குமூலம் தந்தார் என்றும் கோபிந்த் சிங் கூறினார்.
அதன்பின்னர், ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து லிம் சம்மதித்தார் என்றும் இதனால்தான் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் லிம் இல்லம் வந்தார் என்றும், எனவே அதிரடிப் பரிசோதனை நடத்தப்பட்டது என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.