ஜோர்ஜ் டவுன் : இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கு எதிராக வழக்காடும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபாண்டி அலி நேரடியாகத் தலைமையேற்கின்றார்.
தனது வழக்கறிஞர் குழுவுடன் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தரும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி
இன்று காலை வழக்கு தொடங்கியபோது, அபாண்டி அலி லிம் குவான் எங்கிற்கு பிணை உத்தரவாதமாக (ஜாமீன்) தொகையாக 1 மில்லியன் ரிங்கிட் விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
எதிர் தரப்பு வழக்கறிஞர்களோ, 2 இலட்சம் ரிங்கிட் பிணை உத்தரவாதம் போதுமானது என வாதிட்டனர்.
இறுதியில் நீதிமன்றம் லிம் குவான் எங்கின் பிணை உத்தரவாதத் தொகையை, ஒரு நபர் உத்தரவாதத்துடன் 1 மில்லியன் ரிங்கிட்டாக நிர்ணயித்தது.
இருப்பினும் லிம் குவான் எங் தனது அனைத்துலகக் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டியதில்லை என்றும், ஆனால், வெளிநாடு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பாக அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டுமென நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இந்த நிபந்தனைகளை குவான் எங்கின் வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ ஏற்றுக் கொண்டார்.
நீதிமன்றத்தில் லிம் குவான் எங்…
இதற்கிடையில் குவான் எங்கிற்கு பங்களாவை விற்ற பெண் வர்த்தகரான பாங் லீ கூன் மீது 2 இலட்சம் ரிங்கிட் பிணை உத்தரவாதம் விதிக்கப்பட்டுள்ளது.
குவான் எங் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் பிரிவு 23இன்படி, ஒரு விவசாய நிலத்தை, வணிக மேம்பாட்டுக்குரிய நிலமாக தரம் பிரித்த காரணத்திற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மலேசிய குற்றவியல் சட்டம் பிரிவு 165இன்படி, சந்தை விலையை விடக் குறைவான விலையில் ஒரு பங்களாவை வாங்கியதற்காகவும் அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.