பீட்டர்மாரிட்ஸ்பர்க் (தென் ஆப்பிரிக்கா) – 1893ஆம் ஆண்டு என்பது பல வரலாற்றுத் தொடக்கங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஓர் ஆண்டு. அந்த ஆண்டில்தான் தென் ஆப்பிரிக்காவில் சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதன் தென் ஆப்பிரிக்காவின் ஒரு இரயில் நிலையத்தில், அவர் பயணம் செய்த ரயிலில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார்.
மகாத்மா காந்தி அன்று மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்தபடி இரயில் பெட்டிக்குள் அமர்ந்திருக்கும் மோடி…
அந்த சம்பவம்தான், காந்தியை பின்னாளில் மகாத்மாவாக மாற்றிய சம்பவம். அதுமட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து அவர் போராடுவதற்கு தூண்டுகோலாகவும் அமைந்தது அந்த சம்பவம்தான். அந்த சம்பவத்தின் மூலம் மகாத்மா காந்தி பெற்ற மனோதிடம்தான், அவரது அகிம்சைப் போராட்டத்தை இந்தியாவிற்கும் கொண்டு வந்து, 1947இல் இந்திய சுதந்திரத்திற்கும் வழி வகுத்தது.
காந்தியின் பயணப் பாதையில் மோடி
இரயிலில் தனது பயணத்தைத் தொடங்கும் மோடி…
காந்தி அன்று பயணம் செய்த அதே பயணப் பாதையில் அதே போன்றதொரு இரயிலில் இன்று சனிக்கிழமை பயணம் மேற்கொண்டார், தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
பென்ட்ரிச் (Pentrich) என்ற ஊரின் இரயில் நிலையத்திலிருந்து பீட்டர்மாரிட்ஸ்பர்க் (Pietermaritzburg) என்ற ஊரின் இரயில் நிலையம் வரை மோடி இன்று அந்த வரலாற்றுபூர்வ பயணத்தை மேற்கொண்டார். இதே பயணப் பாதையில்தான் அன்று காந்தியும் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
மகாத்மா காந்தி இரயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட பீட்டர்மாரிட்ஸ்பர்க் என்ற ஊரின் இரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி குறித்த கண்காட்சி ஒன்றையும் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
மகாத்மா இரவில் இறக்கிவிடப்பட்ட அந்த இரயில் நிலையத்தின் அறையில்தான் அன்றைய இரவை 1893ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி கழித்தார்.
தான் பயணம் செய்யும் நாடுகளில் எல்லாம் இந்தியாவின் வரலாறுகளை எடுத்துக் கூறும் சம்பவங்களை நினைவு கூர்வதை மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார். மலேசியாவுக்கு வருகை தந்தபோதும், இங்கு இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் நினைவாக, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் இந்தியத் தூதரகத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் இந்தியக் கலாச்சார மையத்திற்கு சுபாஷ் சந்திரபோஸ் கலாச்சார மையம் எனப் பெயர் சூட்டினார் மோடி.
மகாத்மா குறித்த கண்காட்சியைத் திறந்து வைத்து பழைய படங்களைப் பார்வையிடும் மோடி…
தனது இரயில் பயணத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நரேந்திர மோடி”எனது தென் ஆப்பிரிக்கப் பயணம் ஒரு யாத்திரை போல அமைந்து விட்டது. இந்தியாவின் வரலாற்றோடும், மகாத்மா காந்தியின் வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்திருக்கும் மூன்று வரலாற்றுபூர்வ இடங்களையும் பார்த்து விட்டேன்” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கின்றார்.