கோவை – கோவையில் பாராசூட் விளையாட்டின் போது, தொழிலதிபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது அவ்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக மருத்துவக்கல்லூரியும், இந்தியன் ஏரோ ஸ்பேஸ் மற்றும் அறிவியல் கழகமும் இணைந்து பாராசூட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இதில் பங்கேற்றவர்களில் 53 வயதான மல்லேஸ்வர ராவ் என்பவர், பாராசூட் கயிறு அறுந்து கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்நிலையில், தடையை மீறி தனியார் நிறுவனம் பாராசூட் நிகழ்ச்சியை நடத்தியதாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்தியன் ஏரோஸ்பேஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிளைடர் பாபு என்பவர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.