கோயம்புத்தூர் : தமிழ் நாட்டு வருகையின் ஒரு பகுதியாக தொழில் நகரம் கோயம்புத்தூருக்கும் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வருகை தந்தார். அங்குள்ள கேபிஆர் (KPR) மில் நிறுவனத்தின் பெண் ஊழியர்களின் கல்விப் பிரிவு பட்டமளிப்பு விழாவிலும் சரவணன் கலந்து சிறப்பித்தார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதைத் தனக்கு வழங்கப்பட்ட கௌரவமாகக் கருதுவதாகவும் சரவணன் தெரிவித்தார்.
“கேபிஆர் குழுமம், தங்களின் பணியாளர்களுக்கு கூடுதல் கைத்திறன் பயிற்சிகளை வழங்குவதில் முன்னணி வகிக்கிறது. கேபிஆர் மில் லிமிடெட், பெண் பணியாளர்களுக்குக் கல்வியை வழங்கி அவர்களை மேலும் உயர்ந்த பணியில் அமர்த்தும் உன்னத சேவையைச் செய்து வருகிறார் அதன் உரிமையாளர், முனைவர் கே.பி.ராமசாமி அவர்கள்” எனவும் சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
“கேபிஆர் பணியாளர்களின் 9ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது மனதிற்கு நிறைவான விஷயம். குடும்பப் பொறுப்பைச் சுமக்க, வேலைக்குச் செல்கிறோம் என்ற எண்ணத்துடன் வந்த 31000 பெண்கள் இதுவரை பட்டதாரிகளாக உருவெடுத்திருக்கிறார்கள். ‘அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்றார் பாரதியார்” என சரவணன் குறிப்பிட்டார்.