துருக்கி – துருக்கியின் தென் கிழக்கில், சிரியாவின் எல்லைக்கு அருகில் அமைதிருக்கும், காசியன்டெப் என்ற இடத்தில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், 90-க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த, 12 முதல் 14 வயதுடைய சிறுவன் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிரிய எல்லையான காசியன்டெப் பகுதியில் சனிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பை, 12 முதல் 14 வயதுடைய சிறுவன் தான் நடத்தியிருக்க வேண்டும். வெடிகுண்டை அவன் வெடிக்கச் செய்திருக்க வேண்டும் அல்லது வேறு யாராவது வெடிக்கச் செய்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.