சிங்கப்பூர் – இன்று அதிகாலை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் எவ்வித பிரச்சனையும் இன்றி முழுமையடைந்தன என்றும் அவற்றின்படி அவர் முழு உடல் நலத்துடன் உள்ளார் என்றும் சிங்கை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (படம்) தெரிவித்துள்ளார்.
இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஒரு மருத்துவருமான விவியன் பாலகிருஷ்ணன் “மேடையில் நாங்கள் பிரதமர் லீயை நோக்கி ஓடியபோது அவருக்கு வியர்த்திருந்ததையும், அவரது இருதய துடிப்பு குறைந்திருந்ததையும், இரத்த அழுத்தம் குறைந்திருந்ததையும் கண்டோம். ஆனால் எனக்குத் தெரிந்தது என்னவென்றால், மீண்டும் மேடைக்குச் சென்று தனது உரையைத் தொடரவேண்டும் என அவர் விரும்பினார் என்பதுதான்! அவருக்கு முதல்கட்ட முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, அவரோ தனது சுதந்திர தின உரையை மீண்டும் திருத்திக் கொண்டிருந்தார்” என்று கூறியுள்ளார்.
அதன் பின்னர் தனது உரையை அவர் முடித்தபோது அந்த உரையில் அவர் கூறிய வார்த்தைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருந்தது என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பின்னர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு எல்லா மருத்துவ பரிசோதனைகளும் முடிந்தபோது திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணி ஆகியிருந்தது என்றும் பாலகிருஷ்ணன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“நேற்றிரவு தனது சுதந்திர தின உரையில் பேசிய லீ, நமக்கு வாய்த்திருக்கும் நற்பேறுகளை நாம் பயன்படுத்திக் கொள்ளும் திறனை நமக்கு வழங்க வேண்டுமென நாம் கடவுளிடம் கேட்க வேண்டும் என்று நமக்கு நினைவுபடுத்தியிருந்தார். நேற்று பிரதமர் லீக்கு நிகழ்ந்த உடல் நலக் குறைவு சம்பவமும் நமக்கு அதைத்தான் வலியுறுத்துவது போன்று அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து எனக்கு எழுந்த முதல் சிந்தனை – இதுபோன்று மீண்டும் நிகழக்கூடாது என்பதுதான்!” என்றும் விவியன் பாலகிருஷ்ணன் நெகிழ்ச்சியுடன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.