சென்னை – மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் பல கேள்விகளும், சந்தேகங்களும் இருப்பதாக சாதாரண பொதுமக்களில் இருந்து பிரபலங்கள் வரைப் பலர், பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் என வலைத்தளங்கள் அனைத்திலும் புலம்பிக் கொண்டிருப்பது ஒரு புறம் இருக்க, இன்று போயஸ் கார்டனில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
சசிகலா, ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர், தமிழகத்தின் நடப்பு முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, அதிமுக மூத்த நிர்வாகிகள், மதுசூதன், செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி, சைதை துரைசாமி, ராஜன் செல்லப்பா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் போயஸ் கார்டன் சென்று சசிகலாவைச் சந்தித்தனர்.
தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இனி நீங்கள் தான் எல்லாமுமாக இருந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்று அவர்கள் சசிகலாவைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சசிகலாவும் அது குறித்து யோசித்து முடிவு சொல்வதாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.