சென்னை – ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமைக்குப் பின்னால், எப்போதும் நிழல் போல் நடந்து வருபவராக தான் சசிகலாவை தமிழக மக்களுக்குத் தெரிந்திருக்கும்.
சசிகலாவின் குரல் எப்படி இருக்கும்? என்று கூட அறிந்திடாத தமிழக மக்கள், முதல் முறையாக அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரையாற்றுவதைக் கேட்கிறார்கள்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா இன்று சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன் பிறகு, அதே மேடையிலேயே அம்மா வழியில் தான் கட்சியை வழிநடத்துவதாக சசிகலா தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியிருப்பதாவது:-
“தமிழகத்தை வழி நடத்த அம்மா நம்முடன் இல்லாத நிலையில், இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், கழகம் தான் தமிழகத்தை ஆளும் என நம் அம்மா விட்டுச் சென்ற நம்பிக்கையை காப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம்.”
“நமக்கு பெருமை தேடித்தந்த, இயக்கத்தின் இதயமாக, ஒவ்வொருவரின் இதயத்தின் இயக்கமாக, எனக்கு எல்லாமுமாய், எனக்கு மட்டும் அல்ல நம் அனைவருக்கும் எல்லாமுமாய் திகழ்ந்த இதய தெய்வம் அம்மாவை வணங்குகின்றோம்.”
“என்னைக் கழகப்பொதுச் செயலராக ஒரு மனதாக தேர்வு செய்து அம்மாவின் வழியில் கழகப்பணியாற்றிட என்னைப் பணித்தமைக்காக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”
“ஆயிரம் ஆயிரமாயிரம் கூட்டங்களுககு அம்மாவுடன் சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 36 ஆண்டுகளாக அம்மாவுடன் கலந்து கொண்டேன். ஆனால் இன்று மேடைக்கு வந்து உங்களிடைய பேசும் சூழல் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. உங்கள் அன்புக் கட்டளையை ஏற்க வேண்டிய கடமை எனக்கு உண்டு. கற்பனை செய்து கூட பார்க்காத ஒன்று நடந்துவிட்டது.”
“தலையில் இடி வந்து விழுந்ததைப்போல நன்கு உடல் நலம் தேறி வந்த நம் அம்மா, நம்மை விட்டு பிரிந்து விட்டார்.
தன்னை நம்பி வந்த யாரையும் கைவிடாதவர், இன்று தனது மரணத்தின் மூலம் நம் அனைவரையும் கைவிட்டுவிட்டார்.”
“நம் அம்மாவுக்கு இந்த இயக்கம் தான் வாழ்க்கை. எனக்கோ அம்மா தான் வாழ்க்கை. மருத்துவர்களின் போராட்டத்தோடு,கோடானு கோடி தொண்டர்களின் வழிபாடும் ஒன்று சேர, அம்மாவை காப்பிற்றிவிடும் என்று நம்பினேன். போயஸ் தோட்டத்துக்கு வருவார் என்று நம்பினேன். ஆனால், நம்பிக்கை நிறைவேறவில்லை” என்று கண்ணீரோடு கூறினார்.