Home Featured நாடு மீட்கப்பட்ட பாடகர் பென் நாதனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு!

மீட்கப்பட்ட பாடகர் பென் நாதனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு!

786
0
SHARE
Ad

Ben Nathan2கோலாலம்பூர் – கிழிந்த உடை, அழுக்கேறிய தலைமுடி, முகத்தை மறைக்கும் தாடியுமாக,  பிரிக்பீல்ட்ஸ், டத்தான்ரான் மெர்டேக்கா ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த நபர் ஒருவரை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாம். அவருக்கு சாப்பாடு கூட வாங்கிக் கொடுத்திருக்கலாம். நம்மைப் பொறுத்தவரையில் தலைநகரில் சுற்றித் திரியும் எத்தனையோ வீடற்றவர்களில் அவரும் ஒருவர் என்று தான் நினைத்திருப்போம்.

ஆனால் அந்நபர் 1980-களில் புகழின் உச்சியில் இருந்த தலைச்சிறந்த பாடகர் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடிகின்றதா? ஆம்.. ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். 80-களில் ‘Stanza Sepi Sekeping Hati’, ‘Ilusi Satu Penantian’ போன்ற பாடல்களைப் பாடி, மலேசியாவில் இன மொழி பேதமின்றி அனைவராலும் ரசிக்கப்பட்ட தலைச்சிறந்த கலைஞர் பென்நாதன், இன்று அலங்கோலமான நிலையில், உருக்குலைந்து போய் இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

ஏதோ ஒரு காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 9 ஆண்டுகளாக பிரிக்பீல்ட்ஸ் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் வீதிகளில் படுத்து உறங்கி, அங்கு வருவோர் போவோரிடம் செலவிற்கு காசு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அவரை சிலர் அடையாளம் கண்டு, புகைப்படம் எடுத்து, மண்ணின் மைந்தன் மலேசியா என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியிட, அது நாடெங்கிலும் பரவி அவரது ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Ben Nathanஇதனிடையே, ஒரே மலேசியா கலைஞர்கள் அறவாரியத்தின் தலைவரும், பாடகருமான டத்தோ டி.ஜே.தேவ், பாடகர் பென்நாதனை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர, தற்போது முழு முயற்சிகள் எடுத்து வருகின்றார்.

கடந்த ஆறு மாதங்களில் பென்நாதனைப் பலமுறை பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் தான் பார்த்திருப்பதாகவும், எத்தனையோ முறை தன்னுடன் வருமாறு அழைத்தும் பென்நாதன் வர மறுத்துவிட்டதாகவும் டி.ஜே.தேவ் கூறுகின்றார்.

இதனிடையே, பென்நாதனை அரவணைக்க அவரது குடும்பத்தினரும், சகோதரிகளும் தயாராக இருந்த போதிலும் கூட, பென்நாதன் அவர்களுடன் செல்ல மறுப்பதாக டி.ஜே.தேவ் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று பென்நாதனின் குடும்பத்தினரோடு பிரிக்பீல்ட்ஸ் சென்று, அங்கு உணவுக் கடை ஒன்றில் பென்நாதனைச் சந்தித்த டி.ஜே.தேவ், அவரிடம் பேசி ஆறுதல் கூறி, காவல்துறையினரின் உதவியோடு பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.

தற்போது பென்நாதனுக்கு கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதாகவும் டி.ஜே.தேவ் தெரிவித்தார்.

Ben Nathan1தற்போது 54 வயதாகும் பென்நாதன் என்ற பத்மநாதன், இயல்பாகப் பேசினாலும் கூட, இன்னும் லேசான குழப்பநிலையில் இருப்பதாகவே தெரிகின்றது.

அந்த புகழ்பெற்ற கலைஞரின் வாயிலிருந்து ஒரே ஒரு தகவல் தான் மீண்டும், மீண்டும் வந்து கொண்டிருக்கிறது. ஜகார்த்தாவில் இசை நிகழ்ச்சி நடத்த தனக்கு பினாங்கில் இருந்து நிதியுதவி கிடைத்திருப்பதாகவும், விரைவில் ஜகார்த்தா செல்லவுள்ளதாகவும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

ஜகார்த்தாவில் இசை நிகழ்ச்சி நடத்துவது பென்நாதனின் கனவாக இருந்திருக்கலாம். அதில் தனது முழு நம்பிக்கையையும் அவர் கொண்டிருந்திருக்கலாம். கடைசி நேரத்தில் அம்முயற்சி தோல்வியில் முடிந்திருக்கலாம். அதனால் பென்நாதன் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கலாம்.

எது எப்படியோ இப்போது நல்ல உள்ளங்களின் கண்ணில் அவர் பட்டிருப்பதால், அவர் மறுவாழ்வை அடையவுள்ளார்.

விரைவில், புகழ்பெற்ற அந்தக் கலைஞரின் ‘ஜகார்த்தா கனவு’ நனவாகப் பிரார்த்தனை செய்வோம்.

தொகுப்பு: செல்லியல்