Home Featured கலையுலகம் சினிமா பார்வை: ‘லா லா லேண்ட்’ : 14 ஆஸ்கார் பரிந்துரைகள் – படத்தில் ...

சினிமா பார்வை: ‘லா லா லேண்ட்’ : 14 ஆஸ்கார் பரிந்துரைகள் – படத்தில் அப்படி என்ன இருக்கிறது?

1616
0
SHARE
Ad

la-la-land-movie(7 கோல்டன் குளோப் விருதுகளை வென்று வந்த சூட்டோடு சூடாக ஆஸ்கார் பரிந்துரைகள் பட்டியலில், சிறந்த படம் என்பதையும் சேர்த்து, 14 இடங்களைப் பிடித்திருக்கிறது லா லா லேண்ட் ஆங்கிலப் படம். அத்தனை பரிந்துரைகளைப் பெறும் அளவுக்கு அப்படி என்ன இருக்கிறது படத்தில்? செல்லியல் ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் படத்தின் சில சிறப்பம்சங்கள்…)

பொதுவாக ஆங்கில இசைப் படங்கள் (Musical) என்பது எனக்கு அவ்வளவாகப் பிடித்த வகையறா சினிமா அல்ல! ஆங்கில இசைப் பாடல்களின் பிரியனும் நானல்ல! இருந்தாலும் ஓரிரண்டு படங்கள் பார்த்திருக்கிறேன்.

அந்தக் காலத்தில், மாணவப் பருவத்தில் இளைஞர்களை சுழன்று ஈர்த்த படம் “கிரீஸ்” (Grease) பார்த்திருக்கிறேன். பின்னர் அண்மைய ஆண்டுகளில் – 2012-இல் வெளிவந்த – பிரெஞ்சு கலாச்சாரத்தையும், புரட்சியையும் ஒருங்கே படம் பிடித்துக் காட்டிய இசைப்படம் “லெஸ் மிசெரபிள்ஸ்” (Les Misérables) பார்த்திருக்கிறேன். விக்டர் ஹியூகோ என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் அதே தலைப்பில் 1862-இல் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

#TamilSchoolmychoice

golden globe awards-கோல்டன் குளோப் விருதுகள்…

எனவே, ‘லா லா லேண்ட்’ (LA LA Land) ஆங்கில இசைப்படம் என்பதால் முதலில் பார்க்கும் ஆர்வமும் நோக்கமுமில்லை. ஆனால், கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில் அந்தப் படம் 7 பிரிவுகளுக்கு முன்மொழியப்பட்டு, அந்த 7 பிரிவுகளுக்கான விருதுகளையும் அள்ளி வந்தது என்ற செய்தி வந்தபோது, “சரி அப்படி என்னதான் இருக்கப் போகிறது படத்தில்! பார்க்கலாம்” என முடிவு செய்தேன். காரணம், கோல்டன் குளோப் விருதுகள் வரலாற்றில் இதுவரையில் எந்தப் படமும் இத்தனை விருதுகளை ஒரு சேர வெற்றி கொண்டதில்லை.

கோல்டன் குளோப் என்பது அமெரிக்காவில் இயங்கும் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் தேர்ந்தெடுக்கும் சினிமா விருதுகள். எப்போதுமே நியாயமாகவும், பாரபட்சமின்றியும், சினிமா அரசியல் கலவாமலும் இருக்கும்.

அடுத்து, ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டபோது, 14 பிரிவுகளில் லா லா லேண்ட் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்றவுடன், “படத்தைப் பார்த்தே ஆகவேண்டும்” என முடிவு செய்தேன். ஆஸ்கார் விருதுகள் வரிசையில் லா லா லேண்ட் போன்று விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களே கடந்த காலங்களில் இத்தனை விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

2017-Oscars-89th-Academy-Awardsபடம் பார்த்து முடிந்தவுடன் நமது நினைவுக்கு வருவது நமது இயக்குநர் கௌதர் வாசுதேவ் மேனன்தான்! சிரிக்காதீர்கள்!

கௌதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா, அண்மையில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ போன்ற படங்களைப் போன்று எளிமையான, இருவரின் காதலை சில திருப்பு முனைகளுடன் சொல்கிற படம். இறுதிக் காட்சியில் விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற ஒரு குழப்பமான முடிவை வைத்து, இருவரும் உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டார்களா இல்லையா என இரசிகர்களை கேள்வி கேட்க வைத்து, ஆனால் அதற்கான முடிவை குழப்பமில்லாமல் தெரிவித்து முடிகிறது படம்.

அப்படி என்ன கதை?

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்தான் படத்தின் களம். ஆங்கிலத்தில் சுருக்கமாக ‘LA’ என அழைக்கப்படும் நகரம். அதை வைத்துத்தான் படத்தின் தலைப்பும்!

அமெரிக்காவின் சினிமா தலைநகர் ஹாலிவுட் இங்கு இருப்பதால், சினிமாவின் பல்வேறு துறைகளில் வாய்ப்பு தேடி அலைபவர்களும், கலைஞர்களும் குவிவது அந்த நகரில்தான்!

la-la-land-ryan-gosling-emma-stone-1கதாநாயகன் ரயான் கோஸ்லிங் – நாயகி எம்மா ஸ்டோன்…இருவருமே சிறந்த நடிகர், சிறந்த நடிகை  ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள்…

ஓர் துரித உணவகத்தில் பரிமாறுபவராக வேலை செய்து கொண்டே சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைகிறாள் கதாநாயகி. பல முறை ‘ஆடிஷன்’ (audition) எனப்படும் நடிப்புத் தேர்வுகளுக்கு சென்று வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடனும், விரக்தியுடன் வலம் வருகிறாள்.

நாயகனோ, ஜாஸ் (Jazz) எனப்படும் கறுப்பர்களின் இசைக்கேற்ப பியானோ வாசிக்கும் திறமை கொண்டவன். அழிந்து வரும் ஜாஸ் இசையை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற வெறியோடு, இசைக்கலைஞனாக வாய்ப்பு தேடி அலைபவன். அதற்காக உயர்தர உணவகங்களில் பியானோ வாசித்து வருமானம் ஈட்டுகிறான்.

இருவரும் சந்திக்கிறார்கள். காதல் வயப்படுகிறார்கள். காதல் முற்றி, கைகூடும் நிலையில், நாயகிக்கு ஒரு நடிப்புத் தேர்வு வாய்ப்பு வருகிறது. “எத்தனையோ பார்த்து விட்டேன். கூப்பிடுவார்கள். பின்னர் இல்லை என்பார்கள். நான் போகப் போவதில்லை” என தவிர்க்கும் அவளை வற்புறுத்தி “எந்த நிலையிலும் நமது தேடலையும், ஆர்வத்தையும், முயற்சியையும் விட்டு விடக் கூடாது. விரட்டிக் கொண்டே இருக்க வேண்டும்” என அனுப்பி வைக்கிறான் நாயகன்.

நாயகிக்கு அந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்து விடுகின்றது. மாதக்கணக்கில் பாரிஸ் சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்ளவேண்டும். பிரிகிறாள்.

damien-chazelle-la-la-land-நாயகன்-நாயகி (இடது) – படத்தின் இயக்குநர் டாமியென் சாசெல் (வலது) சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். வயது 31-தான்!

இதற்கிடையில், நாயகனுக்கு ஒரு ஜாஸ் இசைக்குழுவில் சேர்ந்து பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு வருகிறது. செல்கிறான்.

திடீரென படம் முடிந்து, இறுதிக் காட்சிக்கு வருகிறது. நாயகி ஒரு பெரிய வீட்டில் இருக்கிறாள். கையில் குழந்தை. கணவனாக அருகில் இருப்பவன் வேறொருவன். நாயகனல்ல. இருவரும், ஓர் உயர்தர உணவகத்திற்கு செல்கிறார்கள்.

அங்கு, பியானோ வாசித்துக் கொண்டிருப்பவன், கதாநாயகன்.

சடக்கென்று மீண்டும் காட்சிகள் மாற, நாயகியின் கணவனாக நாயகனே வருவது போன்று காட்சிகள் வருகின்றன. கௌதம் மேனன் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் இறுதியில் வைத்த குழப்பக் காட்சிகள் போன்று நமக்கும் குழப்பம் – உண்மையிலேயே நாயகி யாரைத் திருமணம் செய்து கொண்டாள்? நாயகனையா? வேறொருவனையா?

முடிச்சை இறுதியில் அவிழ்க்கிறார்கள்!

படம் சொல்லும் எளிமையான – இன்றைய நவீன காலத்துக்குத் தேவையான தத்துவம் இதுதான்! நீங்கள் உங்களின் இலக்கை – ஆர்வத்தை – (Passion) விடாமல் விரட்டிக்கொண்டே இருக்க வேண்டும். நிச்சயம் அடைவீர்கள்! ஆனால் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை இழந்துதான் அதை அடைவீர்கள்.

ஏன் இத்தனை ஆஸ்கார்கள்?

la la land-ryan gosling-நாயகன் ரயான் கோஸ்லிங் ஜாஸ் பியானோ கலைஞராக பாத்திரமேற்றிருக்கும் படம் லா லா லேண்ட்….

சினிமாஸ்கோப் என்ற அகண்ட திரையில் அந்தக் காலப் படம் போல் எடுக்கப்பட்டிருக்கும் படத்தின் நுணுக்கங்களையோ, சிறப்பம்சங்களையோ அதிகமாக ஆராயத் தேவையில்லை. 14 விருதுகள் என்பதே போதுமான சாட்சி!

பளிச்சென்று நமது கண்களில் பதிவது படத்தின் வண்ணக் குழைவு. விதம் விதமான வண்ணங்களில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதோடு, படத்தின் கதாபாத்திரங்கள் உடுத்தும் ஆடைகளிலும் அத்தனை விதமான வண்ணங்கள்! அதனால், சிறந்த ஒளிப்பதிவுக்கும், சிறந்த ஆடை வடிவமைப்புக்கும் படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

இசைப் படம் என்பதால் அடுத்தடுத்து பாடல்கள் வருகின்றன. முதல் காட்சியிலேயே சாலை முழுக்க கார்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு நகரமுடியாமல் தவிக்க, காரில் உள்ளவர்கள் வெளியே வந்து சாலைகளிலும், கார்களின் மீது ஏறியும் ஆடிப் பாடி மகிழ்கிறார்கள்.

பல நுணுக்கமான அம்சங்களை, நவீன வாழ்க்கைத் தத்துவங்களை, நவீன அமெரிக்க இளைய சமுதாயத்தின் போராட்டங்களை ஆங்காங்கே தூவியிருப்பதுதான் படத்தின் சிறப்பு. இன்றைய நவீன யுகத்தில், இளைஞர்கள் அருகி வரும் கலாச்சாரத்தை தூக்கிப் பிடித்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல அவர்கள் சந்திக்கும் சவால்கள் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளன.

இருந்தாலும், சரியான போட்டிப் படங்கள் இல்லாத காரணத்தினால்தான் இந்தமுறை லா லா லேண்ட் இத்தனை விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பெற்றிருக்கிறது எனலாம்.

La La Land-ஆஸ்கார் விருதுகளுக்கும் அதிர்ஷ்டம் வேண்டும் என்பார்கள் ஹாலிவுட் விமர்சகர்கள். அதற்கு உதாரணமாக 1983-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் பட்டியலைச் சுட்டிக் காட்டுவார்கள்.

1983-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் போட்டிகளில் ‘காந்தி’ ஆங்கிலப் படம் 11 பிரிவுகளில் ஆஸ்கார் பரிந்துரைகளைப் பெற்றது. அதே ஆண்டில் டஸ்டின் ஹோப்மென் கதாநாயகனாக நடித்த ‘டூட்சி’  10 பரிந்துரைகளைப் பெற்றது.

டூட்சியும் பல அம்சங்களில் சிறந்த படம்தான். சினிமா வாய்ப்புக்காக கதாநாயகன், பெண் வேடமிட்டு, படத்தின் இயக்குநரை ஏமாற்றும் படம். பின்னர் படத்தின் இயக்குநர் பெண் வேடமிட்ட கதாநாயகனைக் காதலிக்கத் தொடங்குவார்.

gandhi movie1983-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் பட்டியலில், 11 ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு 8 விருதுகளை வென்றது காந்தி படம்…

‘மிசஸ் டவுட்பையர்’ (Mrs. Doubtfire) ஆங்கிலப் படம் தொடங்கி, நமது கமலஹாசனின் ‘அவ்வை சண்முகி’, அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த ‘ரெமோ வரை பல படங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த படம் டூட்சி.

அந்த ஆண்டில் காந்தி-டூட்சி இரண்டுக்கும் இடையில் நிகழ்ந்த கடும் போட்டியில் எந்தப் படம் அதிக ஆஸ்கார்களை அள்ளும் என அகில உலகமுமே காத்திருந்தது.

ஆஸ்கார் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, காந்தி படம் 8 விருதுகளைப் பெற்றது. டூட்சி ஒன்றுதான் பெற்றது.

tootsie-movie-poster- அதே 1983-ஆம் ஆண்டில் 10 ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, ஒரே ஒரு விருதை மட்டுமே பெற்றது டூட்சி படம்…

தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் ஓர் ஊடகத்திடம் தனிப்பட்ட முறையில் பின்வருமாறு கூறியிருந்தார் : “காந்தி, டூட்சி இரண்டுமே சிறந்த படங்கள்தான். ஆனால் டூட்சி மாதிரி ஒரு படம் அடுத்த ஆண்டில் கூட வெளிவரலாம். ஆனால், காந்தி போன்ற ஒரு படம் இன்னொரு முறை வெளிவருமா என்பது சந்தேகம். அதனால்தான், அந்தப் படத்திற்குக் கொடுத்தோம்”

இப்படித்தான், சில போட்டிகளால் சிறந்த சில படங்கள் ஆஸ்கார் விருதுகளைத் தவறவிட்டிருக்கின்றன.

ஆனால், கடந்த ஆண்டில் அத்தகைய கடும் போட்டி தரக் கூடிய படங்கள் ஏதும் இல்லாத காரணத்தால்தான், லாலா லேண்ட் இத்தனை விருதுகளை வாரிக் குவித்திருக்கிறது என்கிறார்கள்.

இருந்தாலும், இறுதியில் எத்தனை விருதுகளை இந்தப் படம் வென்று வருகிறது பார்ப்போம்.

ஆஸ்கார் விருதுகள் விழா எதிர்வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் – அதாவது லா லா லேண்ட் படத்தின் கதைக்களமான அதே நகரில் – நடைபெறுகின்றது. நம்ம ஊர் நேரத்திற்கு மறுநாள் காலை அதாவது பிப்ரவரி 27-ஆம் தேதி காலை அஸ்ட்ரோவின் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒன்றில் நேரலையாக ஒளிபரப்பாகும்.

காணத் தவறாதீர்கள்!

முடிந்தால் அதற்கு முன்பாக, தற்போது மலேசியாவின் பல திரையரங்குகளில் அரங்கேறியிருக்கும் லா லா லேண்ட் படத்தையும் ஒருமுறை பார்த்து விடுங்கள்.

அப்போதுதான், அப்படியே அந்தப் படம் ஆஸ்கார் விருதுகளை வாரிக் குவித்தால், அதற்கான காரணங்களையும் தெரிந்து கொள்வீர்கள்!

-இரா.முத்தரசன்