Home கலை உலகம் மிச்சல் இயோ : உச்சம் தொட்ட சாதனைகள் – வாழ்க்கையில் சந்தித்த சோகங்கள்

மிச்சல் இயோ : உச்சம் தொட்ட சாதனைகள் – வாழ்க்கையில் சந்தித்த சோகங்கள்

612
0
SHARE
Ad

(மிச்சல் இயோ – கடந்த சில நாட்களாக மலேசியாவெங்கும் – ஏன் உலக அளவில் கூட அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். கோல்டன் குளோப், ஆஸ்கார் என அடுத்தடுத்து சிறந்த நடிகைக்கான விருதுகளைப் பெற்று, சீன சமூகத்திற்கும் மலேசியாவிற்கும் பெருமை தேடித் தந்துள்ளார். அவரின் வாழ்வின் சாதனைகளோடு இணைந்த சில சோகங்களையும் இந்தக் கட்டுரையில் விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

* முதுகெலும்பு காயத்தால் பாலே நடனமணியாகும் கனவுகள் தகர்ந்த சோகம்

* 21-வது வயதில் மிஸ் மலேசியா அழகியாக மகுடம்
சிறந்த நடிகைக்கான ஆஸ்கார், கோல்டன் குளோப் விருதுகளை அள்ளிக் குவித்தவர்

* 3 காதல் திருமணங்கள்
எனினும் குழந்தைகள் பெற முடியாத ஏக்கம்

#TamilSchoolmychoice

இளம் வயதில் பாலே (Balle) நடனமணியாக வேண்டும் என ஆசைப்பட்டவர் மிச்சல் இயோ. அதற்காக 15-ஆவது வயதிலேயே இலண்டனில் உள்ள ராயல் அகாடமி ஆப் டான்ஸ் என்ற கல்லூரியில் சேர்ந்து படித்தார். தொழில்முறை பாலே நடனமணியாவதுதான் அவரின் அப்போதைய கனவாக இருந்தது.

முதுகெலும்பில் ஏற்பட்ட எதிர்பாராத காயத்தால் அவரின் கனவுகள் சிதைந்தன. ஆனால் கடவுள் அவருக்காக வேறு சில பாதைகளைத் திட்டமிட்டு வைத்திருந்தார் போலும்!

உடலமைப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவர் 21ஆவது வயதில் 1983ஆம் ஆண்டில் மிஸ் மலேசியாவாக மகுடம் சூட்டப்பட்டார். அந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்குக் கூட தன் தாயார்தான் தனக்குத் தெரியாமல் தன் பெயரைச் சமர்ப்பித்ததாகக் கூறியிருக்கிறார் மிச்சல் இயோ.

தொடர்ந்து இலண்டனில் நடைபெற்ற மிஸ் வோர்ல்டு போட்டியிலும் அவர் மலேசியாவைப் பிரதிநிதித்தார். வழக்கமாக மலேசியாவில் மிஸ் மலேசியா போட்டிகளில் வெற்றிபெறுபவர்கள் உள்ளூரில் சில விளம்பரப் படங்களில் நடிப்பார்கள். சிலர் கலைத்துறையில் ஈடுபடுவார்கள். ஆனால் பலர் அதன்பின் மக்கள் பார்வையில் காணாமல் போய்விடுவார்கள்.

நடிப்பதற்காக ஹாங்காங் சென்ற மிச்சல் இயோ…

ஜேக்கி சான்னுடன் இளம் வயது மிச்சல் இயோ…

ஆனால் மிச்சல் இயோ ஒரு வித்தியாசப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். சீனப் படங்களுக்கான அனைத்துலக மையமாகத் திகழ்ந்த ஹாங்காங் நோக்கிப் பயணமானார். கடுமையான போட்டிகள் நிறைந்த ஹாங்காங் பட உலகில் களத்தில் குதித்தார் மிச்சல் இயோ.

அவரின் முயற்சியும் உழைப்பும் வீண் போகவில்லை. பல தொலைக்காட்சி நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பைப் பெற்றார். அவருக்குத் தற்காப்புக் கலையும் தெரிந்திருந்தால் அது தொடர்பான ஹாங்காங் படங்களில் நடிக்க வாய்ப்புகளைப் பெற்றார்.

பிரபல ஹாங்காங் நடிகர் ஜேக்கி சானுடன் முதலில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தார். அதன்மூலம் பிரபல்யமும் அடைந்தார். அடுத்து ஜேக்கி சான்னுடன் ஒரு முழுநீள சினிமாப் படத்தில் நடித்தார்.

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் முத்தக் காட்சிகளுடன்…

பியர்ஸ் புரோஸ்னானுடன் ஜேம்ஸ்பாண்ட் படத்தில்…

மிச்சல் இயோவுக்கு அனைத்துலகப் புகழ்பெறும் வாய்ப்பும் அடுத்து அமைந்தது. பியர்ஸ் புரோஸ்னான், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த Tomorrow Never dies என்ற படத்தில் கதாநாயகிகளுள் ஒருவராக நடிக்கத் தேர்வு செய்யப்பட்டார் மிச்சல் இயோ.

அந்தப் படத்தில் அவரின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களை ஈர்த்தது. பியர்ஸ் புரோஸ்னானுடன் நெருக்கமான காதல் காட்சிகளிலும், முத்தக் காட்சிகளிலும் நடித்துக் கிளுகிளுப்பூட்டினார். விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளில் நடித்ததாலும் அவர் மீதான கவனிப்பு உலகளவில் அதிகப்படுத்தியது. அனைத்துலக அளவில் கவனிக்கப்பட்ட அவர் ஹாலிவூட் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஹாங்காங்கின் பிரபல இயக்குநர் ஆங் லீ. அவர் இயக்கிய Crouching Tiger Hidden Dragon என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார் மிச்சல் இயோ. இந்தப் படமும் மிச்சல் இயோவின் புகழையும் திறமையையும் பறைசாற்றியது. 2000-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது.

யாரும் எதிர்பாராத வண்ணம் 2001ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது விழாவில் 10 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது இந்தப் படம். சீனப் படமான இந்தப் படம் சிறந்த படத்திற்கான தேர்விலும் இடம் பெற்றது. ஆனால் இறுதியில் சிறந்த வெளிநாட்டுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அது தவிர சிறந்த கலை இயக்கம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளையும் பெற்றது.

நடப்பு கணவர் ஜீன் தோட்

அந்தக் காலகட்டத்தில் ஆங்கிலம் அல்லாத ஒரு படம் இந்தளவுக்குப் பரிந்துரைகளையும் விருதுகளையும் பெற்றது அதுவே முதன்முறையாகும். கோல்டன் குளோப், பிரிட்டிஷ் திரைப்பட விருதுகள் ஆகியவற்றிலும் சில விருதுகளை வென்றது இந்தப் படம்.

பல படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்றாலும் நடிப்புத் துறையில் மிச்சல் இயோ அனைத்துலக அளவில் விருதுகளைப் பெறுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. நமது நாட்டின் ஈப்போ நகரைச் சேர்ந்த அவர் தமது விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பாலும் நடிப்புத் துறையில் தீவிரக் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த Crazy Rich Asians என்னும் சிங்கப்பூரைக் கதைக் களமாகக் கொண்ட படத்தில் பணக்காரத் தாயாராக நடித்துக் கவர்ந்தார்.

ஆஸ்கார் விருது கைக்கு வந்தது…

கடந்தாண்டு வெளிவந்த Everything Everywhere all at once திரைப்படத்தில் நடித்ததால் நடிப்புத் துறையில் மீண்டும் சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தார் மிச்சல் இயோ.

கோல்டன் குளோப் விருதுகளில் அந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். அதைத் தொடர்ந்து மார்ச் 12-ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கார் விருதுகள் விழாவில் சிறந்த நடிக்கைக்கான விருதைப் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எங்கும் பரவலாக நிலவியது.

11 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படம் இறுதியில் 7 விருதுகளை வென்றது. அதில் ஒன்றுதான் மிச்சல் இயோ பெற்ற சிறந்த நடிகைக்கான விருது.

மலேசியாவின் புகழை அனைத்துலக பரப்பியவர்…

தான் பெற்ற விருதுகள் மூலம் இதன்மூலம் மலேசியாவின் புகழையும் அனைத்துலக அரங்கில் அவர் தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

விருதைப் பெற்றுக்கொண்டு நன்றியுரை ஆற்ற வந்த அவர், மலேசியாவில் கோலாலம்பூரில் என் 83 வயது தாயார் இதனைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார்.

அதன் மூலம் ஒரே நேரத்தில் தொலைக்காட்சிகளில் முன் உலகம் முழுக்க அமர்ந்திருந்த கோடிக்கணக்கானோருக்கு நமது நாட்டைப் பற்றியும் தெரிந்திருக்கும்.

கலைஞர்களில் பி.ரம்லிக்குப் பிறகு, கிருஷ்ணனுக்குப் பிறகு டான்ஸ்ரீ விருது பெற்ற ஒரே கலைஞரும் மிச்சல் இயோதான். கோல்டன் குளோப், ஆஸ்கார் ஆகிய விருதுகளைப் பெறும் முதல் மலேசியராக மட்டுமல்லாமல் முதல் ஆசியராகவும் அவர் திகழ்கிறார். அதன் காரணமாக அவருக்கு மாமன்னர் முதல் பிரதமர் வரை பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

மிச்சல் இயோவின் காதலும் திருமணமும்

மிச்சல் இயோவின் முதல் கணவர் டிக்சன் பூன்

ஹாங்காங்கில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது நகை நிறுவனம் ஒன்றின் தலைவரான டிக்சன் பூன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார் மிச்சல் இயோ. 1988 முதல் 1992 வரை அவர்களின் திருமண வாழ்க்கை நீடித்தது. அதன்பின் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.

அதற்குக் காரணம் தனக்கு குழந்தை பெற இயலாத சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததுதான் என்பதை மிச்சல் இயோவே பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். பல மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சைகளைப் பெற்றாலும் தன்னால் கருத்தரிக்க முடியாது என்பதைத் தாம் உணர்ந்ததையும் அந்தச் சோகத்தை மனத்தளவில் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கின்றார்.

எனினும் தனது கணவரான டிக்சன் பூனின் பிள்ளைகளைத் தனது சகோதரர்களின் பிள்ளைகளையும் தனது வளர்ப்புப் பிள்ளைகளாகக் கருதுவதாக அவர் தெரிவித்திருக்கின்றார். தனது முதல் கணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் டாக்டர் எலென் எல்டுமெண்ட் என்ற அமெரிக்க மருத்துவரைக் காதலித்து திருமணம் புரிந்துகொண்டார்.

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் விளம்பரத்திற்காகப் பல நாடுகளுக்குச் சென்றபோது தன் புதிய காதலரைச் சந்தித்தார் மிச்சல். ஆனால் அவர்களின் காதல் வாழ்க்கை ஓராண்டு மட்டுமே நீடித்தது. 2000ஆம் ஆண்டில் அவர்கள் பிரிந்தனர். பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் தற்போதைய நடப்பு காதலரான ஜின் தோட் என்பவரைச் சந்தித்தார் மிச்சல்.

நடப்புக் கணவர் ஜின் தோட்

ஜின் தோட் பந்தயக் கார் ஓட்டும் விளையாட்டில் ஈடுபட்டவர். பின்னர் பெராரி 1 என்ற கார் பந்தய நிறுவனத்திற்குத் தலைவரானார். தற்போது அவருடன் சேர்ந்து வாழ்கிறார் மிச்சல் இயோ. ஜின் தோட்டின் மகனைத் தனது வளர்ப்பு மகனாகக் கருதுகிறார்.

60 வயதாகிவிட்ட மிச்சல் இயோவுக்குச் சொந்தமாகக் குழந்தைகள் ஏதும் இல்லை. குழந்தைகளைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் எல்லா மருத்துவ வாய்ப்புகளையும் சோதித்துப் பார்த்தும் தனக்கு அந்தப் பிராப்தம் இல்லை என்பதால் அதனை மனத்தளவில் ஏற்றுக்கொண்டதாகக் கூறுகிறார் மிச்சல் இயோ.

என்ன செய்வது? கடவுள் ஒருவருக்கு எல்லாவற்றையும் கொடுப்பதில்லையே!

– இரா.முத்தரசன்