கோலாலம்பூர் -அரசாங்க மருத்துவமனைகளில் பல் சிகிச்சைகளுக்கு இதுவரை இருந்து வந்த கட்டணங்கள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்திலிருந்து பல மடங்காக உயரவுள்ளது.
அண்மையில், நட்பு ஊடகங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ நூர் ஹிஷாம் அப்துல்லா அத்தகவல்களை உறுதிப்படுத்தினார்.
1982-ம் ஆண்டு மருத்துவக் கட்டணம் சட்டத்தின் அடிப்படையில் இந்தப் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகவும் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
எனினும், முதலாவது வார்டு, இரண்டாவது வார்டு நோயாளிகளுக்கு மட்டுமே இந்தக் கட்டண உயர்வு பொருந்தும் என்றும், உதவித் தொகை வழங்கப்படும் மூன்றாவது வார்டு நோயாளிகளுக்கு இந்தக் கட்டண உயர்வு பொருந்தாது என்றும் நூர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
இந்தப் புதிய கட்டணங்களின் படி, பல் பிடுங்குவதற்கு 1 ரிங்கிட்டாக இருந்த கட்டணம் 15 ரிங்கிட்டாக உயர்கிறது. பல் சுத்தம் செய்வதற்கு 2 ரிங்கிட்டாக இருந்த கட்டணம் 25 ரிங்கிட்டாக உயர்கிறது. பல் சீரமைப்பிற்கு 2 ரிங்கிட்டாக இருந்த கட்டணம் 55 ரிங்கிட்டாக உயர்கிறது.
ஏற்கனவே, ஜனவரி மாதத்திலிருந்து எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், தற்போது பல் சிகிச்சைக்கும் கட்டண உயர்வு வரவிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.