கோலாலம்பூர் – ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரித்து வந்த புதுடில்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றம் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரின் மீதான குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்து அதிரடித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இதன் மூலம் அந்த வழக்கில் சிக்கிக் கொண்டிருந்த மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் ஆனந்த கிருஷ்ணனும் நிச்சயம் நேற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்.
அவரது, வணிகத் துறை வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக, ஏர்செல்-வழக்கு விவகாரம் பதிந்து விடும் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, அதிலிருந்தும் மீண்டு வந்திருக்கிறார் அவர்.
மலேசிய சன் பத்திரிக்கையில் விளம்பரம்
‘சன்’ ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் ஒரு பகுதி….
அவர் புதுடில்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்து தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என முதன் முறையாக மலேசியாவின் சன் ஆங்கில இதழில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் இரண்டு பக்க விளம்பரம் செய்யப்படும் அளவுக்கு வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்தது.
ஆனந்த கிருஷ்ணன் நீதிமன்றம் வராவிட்டால், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் மூலமாக அவர் ஏர்செல் நிறுவனத்தில் செய்திருக்கும் முதலீடுகளுக்குப் பெரும் பாதிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஏர்செல் நிறுவனம் உரிமம் கொண்டிருந்த 2-ஜி அலைக்கற்றை அரசாங்கத்தால் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டு மற்றவர்களுக்கு விற்பனை செய்யப்படும் என்றும் நீதிமன்றம் கடுமையாகக் கூறியிருந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி ஆனந்த கிருஷ்ணன் மீது கைது ஆணை பிறப்பிக்கப்படும் அளவுக்கு வழக்கு விவகாரம் கடுமையாகக் கருதப்பட்டது. ஆனால், மலேசியாவின் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) ஆனந்த கிருஷ்ணனை இந்திய நீதிமன்றத்தின் ஆணைப்படி கைது செய்ய சட்டங்கள் இடம் தரவில்லை என்று கூறிவிட்டார்.
ஆனந்த கிருஷ்ணன் மீதான குற்றப் பத்திரிக்கையை அவரிடம் சார்வு செய்ய இயலாமல்போன காரணத்தால்தான் சன் பத்திரிக்கைகளில் விளம்பரமும் வெளியிடப்பட்டது.
இப்போது அனைத்திலிருந்தும் ஆனந்த கிருஷ்ணனுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது.
அவரோடு, அவரது முன்னாள் வணிக நண்பர் ரால்ப் மார்ஷ்ல், ஆனந்த கிருஷ்ணனின் மலேசிய நிறுவனங்களான மேக்சிஸ், அஸ்ட்ரோ ஆகியவையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கினால், ஆனந்த கிருஷ்ணனின் 30 ஆண்டுகால வணிக நண்பர் ரால்ப் மார்ஷலுக்கும் ஆனந்த கிருஷ்ணனுக்கும் இடையில் கூட விரிசல் ஏற்பட்டது. ஆனந்த கிருஷ்ணனின் பல நிறுவனங்களில் அவரைப் பிரதிநிதித்திருந்த ரால்ப் மார்ஷல் அஸ்ட்ரோ, மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பொறுப்புகளிலிருந்து விலகினார்.
ஏர்செல் நிறுவன விற்பனைக்கு இனி தடை இல்லை
ஆனந்த கிருஷ்ணன் மீதான வழக்குகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளதால், இனி அவர் தனது ஏர்செல் உரிமையை மற்றவர்களுக்கு விற்பனை செய்வதில் தடைகள் ஏதும் இருக்காது.
இந்தியாவில் மேக்சிஸ் கொண்டிருக்கும் ஏர்செல் நிறுவனப் பங்குகளை இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கொம்யுனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு விற்பதற்கு ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. இந்தியாவின் முதலாவது பணக்காரர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியின் நிறுவனம்தான் ரிலையன்ஸ் கொம்யுனிகேஷன்ஸ்.
ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இனி இந்த விற்பனை நடைமுறைக்கு வருவதில் சிக்கல் இருக்காது என்றே கருதப்படுகின்றது. ரிலையன்ஸ்-ஏர் செல் இணைவதன் மூலம் அந்தக் கூட்டு நிறுவனம் இந்தியாவின் நான்காவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக உருவெடுக்கும் என வணிக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தனது நிறுவனங்களின் சார்பிலான முதலீடுகளில் இருந்து ஆனந்த கிருஷ்ணன் தன்னை விடுவித்துக் கொள்வார் என்றும் மீண்டும், இந்தியாவில் தொலைத் தொடர்பு வணிகப் பரிவர்த்தனைகளில் ஈடுபடமாட்டார் என்றும் கருதப்படுகின்றது.
இருப்பினும் சன் தொலைக்காட்சி குழுமத்தில் அஸ்ட்ரோ நிறுவனம் செய்துள்ள முதலீடுகள் தொடர்ந்து நிலைத்திருக்குமா அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமா என்பதும் இனிமேல்தான் தெரிய வரும்.
மாறன் சகோதரர்களுக்கும் வெற்றி
மாறன் சகோதரர்களுக்கும் இந்த வழக்கு மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகின்றது. தொடக்கம் முதல் தங்கள் மீதான அரசியல் பழிவாங்கல்தான் இந்த வழக்கு என அவர்கள் இருவரும் கூறிவந்தனர்.
இனி கலாநிதி மாறன் தனது வணிக விரிவாக்கத்திலும், ஒருங்கிணைப்பிலும் கவனம் செலுத்த முடியும். தயாநிதி மாறனோ அரசியலில் தொடர்ந்து பிரகாசிப்பதற்கு இந்த வழக்கு ஒரு முட்டுக் கட்டையாகப் பார்க்கப்பட்டது. இனி அந்த இடையூறுகள் இன்றி தயாநிதி மாறன் அரசியலில் தீவிரம் காட்ட முடியும்.
ஆனந்த கிருஷ்ணனைப் பொறுத்தவரை, 79 வயதாகிவிட்ட அவர், இனி இந்தியாவில் உள்ள தனது வணிக முதலீடுகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசியல் கலந்த தனது வணிக ஈடுபாட்டால், பல கசப்புகளை இந்தியாவில் சந்தித்த ஆனந்த கிருஷ்ணன் இனியும் வேறு வடிவங்களில் வணிக முதலீடுகளில் அந்த நாட்டில் ஈடுபடுவாரா என்பது சந்தேகமே!
எனினும், வழக்கின் தீர்ப்பு மீது இந்திய அரசாங்கம் மேல்முறையீடு செய்யுமா? அல்லது வேறு முனைகளில் 2-ஜி விவகாரங்களையும், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமா என்பதையும் பொறுத்திருந்துப் பார்க்க வேண்டும்.
இதற்கு மேல், இந்த வழக்கு தொடராது என்ற நிலைமை ஏற்பட்டால்தான், ஆனந்த கிருஷ்ணன் இந்தியாவிலுள்ள தனது வணிக முதலீடுகள் மீது அடுத்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகிறார் என்பது தெளிவாகும்!
-இரா.முத்தரசன்