கோலாலம்பூர் – நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறும் மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில், மீண்டும் கட்சிக்குத் திரும்பியுள்ள டத்தோ சோதிநாதன், மற்றும் கட்சியில் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படும் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன், பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் ஆகிய மூவரும் மத்திய செயலவை உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கு தான் முழு ஆதரவு தெரிவிப்பதாக நடப்பு மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ சுந்தர் சுப்ரமணியம் (படம்) தெரிவித்துள்ளார்.
சோதி,பாலகிருஷ்ணன், ஹென்ரி ஆகியோர் மத்திய செயலவை உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என ஆரூடங்கள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து ‘செல்லியல்’ தொடர்பு கொண்டபோது சுந்தர் மேற்கண்டவாறு கூறினார்.
டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் – டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம்
“மத்திய செயலவைக்கான நியமன உறுப்பினர் என்பது முழுக்க முழுக்க மஇகா தேசியத் தலைவரின் உரிமையாகும். அந்த உரிமையை அவர் முழுமையாகவும், சுதந்திரமாகவும் பயன்படுத்துவதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதில் நெருக்கடிகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது” என்றும் சுந்தர் செல்லியலுக்கு செல்பேசி வழி வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் தெரிவித்தார்.
“கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் கட்சிக்குத் திரும்புவது என்பது வரவேற்கக் கூடியது. பாராட்டத்தக்கது. இத்தகைய முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டுமே தவிர எதிர்ப்புகளைத் தெரிவிப்பது முறையல்ல. அவர்கள் வேறு கட்சியிலிருந்தோ, அல்லது எதிர்க்கட்சிகளில் இருந்தோ வரவில்லை. அவர்களும் ஒரு காலகட்டத்தில் நம்மோடு ஒன்றாக இருந்த சகோதரர்கள்தான். ஏதோ சில அரசியல் காரணங்களால், சூழ்நிலைகளால் பிரிந்து நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. கட்சிக்கு அவர்கள் திரும்ப நினைத்தால் வாழ்த்தி வரவேற்போம். அவர்களுக்கு மத்திய செயலவை போன்ற கட்சிப் பதவிகள் வழங்கப்படுவதால் கட்சி மேலும் வலுவடையும், என்றால் அதனால் கட்சியில் ஒற்றுமைக்கான சூழல் மேலோங்கும் என்றால், அதற்கான வாய்ப்புகளையும் அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும். அத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு தேசியத் தலைவருக்கு நாம் முழு ஆதரவையும், சுதந்திரத்தையும் வழங்க வேண்டும்” என்றும் சுந்தர் மேலும் கூறினார்.
சுந்தர் சுப்ரமணியம் தற்போது மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினராக, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டு பதவி வகித்து வருகின்றார்.
“கட்சியின் மூத்த உறுப்பினர்களான டத்தோ சோதிநாதன், டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன், டத்தோ ஹென்ரி போன்றவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்புவதற்கும், மத்திய செயலவை உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கும் நான் எனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். அதே வேளையில், அவர்கள் மீண்டும் மத்திய செயலவை உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதில் தேசியத் தலைவருக்கு இடையூறுகள் இருக்குமானால், அதற்காக, எனது மத்திய செயலவை உறுப்பினர் நியமனப் பதவியை விட்டுத் தரவும் நான் தயாராக இருக்கின்றேன். கட்சியின் அமைப்பு விதிகளின்படி நியமனப் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது தேசியத் தலைவரின் முழு உரிமையாகும்” என்றும் சுந்தர் சுப்ரமணியம் மேலும் தெரிவித்தார்.