ஜோகூர் பாரு – தனக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பேசி அதைக் காணொளியாக பேஸ்புக்கில் வெளியிட்டவரை, காவல்துறைத் தடுப்புக் காவலில் இருந்து விடுவித்திருக்கிறார் ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நேரடியாக ஜோகூர் காவல்துறைத் தலைமையகத்திற்குச் சென்ற துங்கு இஸ்மாயில், ‘மார் தேரே’ என்ற 29 வயதான இளைஞரை தடுப்புக் காவலில் இருந்து விடுவித்து அவரது சொந்த ஊரான கிளந்தானுக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து துங்கு இஸ்மாயில், தனது ஜோகூர் சதர்ன் டைகர்ஸ் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவலில், ‘மார் தேரே’ ஒரு அப்பாவி, சிலத் தரப்பினரின் அரசியல் சூழ்ச்சியால் பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதோடு, மக்கள் பாதுகாப்பதிலும், மக்களிடையே பிளவை ஏற்படுத்த நினைக்கும் சில தனிநபர்களின் எதிராகவும் சிறப்பாகச் செயல்படும் கிளந்தான் அரசாங்கத்திற்கும் துங்கு இஸ்மாயில் தனது நன்றியைத் தெரிவித்தார்.
துங்கு இஸ்மாயிலுக்கு எதிராக பேஸ்புக்கில் காணொளி ஒன்று பதிவு செய்யப்பட்டிருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் ‘மார் தேரே’ கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: ஜோகூர் சதர்ன் டைகர்ஸ் பேஸ்புக்