ஜோகூர் பாரு : மலேசியக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ‘தேசிய அளவிலான பள்ளி நாடக விழா’ ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்று வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் பங்கேற்கும் இவ்விழா இவ்வாண்டு ஜோகூர் மாநிலத்தில் ஜூலை 29, 30, 31ஆம் நாட்களில் மிகவும் கோலாகலமாக நடந்தேறியது.
தொடக்கப்பள்ளி மாணவர்களும் பங்கேற்ற இவ்வாண்டு விழாவில், மாசாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் பகவத் ஆனந்தா ஜோகூர் மாநிலத்தின் நாடகத்தில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நடிப்புத் தேர்வில், பத்து மாணவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள் பகவத் ஒருவரே தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘வாரிஸ் தாமிங் சாரி’ எனும் தலைப்பில் அரங்கேற்றப்பட்ட ஜோகூர் மாநில நாடகத்தில், பகவத், ‘டாமக்’ எனும் பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்து பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தமிழ்ப்பள்ளி மாணவரான இவருக்கு இவ்விழாவில் ‘சிறந்த துணை நடிகர்’ எனும் விருது வழங்கப்பட்டது மிகவும் பெருமைக்குரிய ஒரு செய்தியாகும்.
பதினைந்து மாநிலக் குழுக்கள் பங்கேற்ற இப்போட்டியில் ஜோகூர், சரவாக், கோலாலம்பூர், சிலாங்கூர், சாபா ஆகிய குழுக்கள் முதல் ஐந்து இடங்களில் முறையே வெற்றி பெற்றன.
மூன்று மாதங்கள் இடைவிடாமல் தொடர் பயிற்சி பெற்று, ஜோகூர் குழுவினர் இச்சாதனையைப் படைத்துள்ளனர். குழுவின் வெற்றிக்குப் பின்னணியில் உழைத்த ஆசிரியர்கள் ஹசிக், ஷாடு, ஷபிக், ஓத்மான், மாசாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம், பிற ஆசிரியர்கள், பெற்றோர்கள், உதவியாளர்கள், மாநில கல்வி இலாகா ஆகியோரின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார், மாசாய் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி இராஜேஸ்வரி ராஜூ.
“மாணவர்களின் இதுபோன்ற வெற்றிக்கு ஆசிரியர்களின் உதவி மட்டும் போதாது. பெற்றோர்களின் பங்கும் அளப்பரியது. பகவத்தின் பெற்றோர்களான சுரேஷ் அச்சப்பன், பத்மா அன்பழகன் இருவரின் ஒப்பற்ற ஒத்துழைப்பு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு” என்று திருமதி இராஜேஸ்வரி மேலும் கூறினார்,
மாசாய் தமிழ்ப்பள்ளி நாடகத் துறையில் பல தேசிய, பன்னாட்டு வெற்றிகளைத் தொடர்ந்து குவித்து வருகிறது. இவ்வாண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் இப்பள்ளியின் மாணவர்கள் ‘பக்த பிரகலாதன்’ எனும் நாடகத்தை மிகப் பெரிய ஓர் அரங்கில் அரங்கேற்றி மலேசியத் தமிழ் நாடக வரலாற்றில் ஒரு முத்திரையைப் பதித்தனர்.
“இதனைத் தொடர்ந்து மாசாய் மாணவர்கள் மேலும் ஓர் அனைத்துலக ஆங்கில நாடகத்தை, சீனாவில் உள்ள சென்ஷன் மாநகரில் இவ்வாண்டு இறுதியில் அரங்கேற்ற உள்ளனர். இதில் மொத்தம் 18 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு மூன்று ஆசிரியர்கள் வழிகாட்டுவர்” என்று மாசாய் பள்ளியின் புறப்பாடத் துணைத் தலைமையாசிரியர் திரு பிரபாகரன் கூறினார். இந்தச் சீனப் பயணத்தில் பெற்றோர்களும் உடன் செல்லவிருக்கின்றனர். பயண ஏற்பாட்டிற்குப் பல்லாற்றானும் உதவி வருகின்ற பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்குப் பள்ளியின் நன்றியையும் திரு பிரபாகரன் பதிவு செய்தார்.