Home நாடு தமிழ் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி: அவசர நடவடிக்கை அவசியம் – டத்தோ முருகையா கோரிக்கை

தமிழ் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி: அவசர நடவடிக்கை அவசியம் – டத்தோ முருகையா கோரிக்கை

169
0
SHARE
Ad
டத்தோ டி.முருகையா

கோலாலம்பூர்: 2025 கல்வியாண்டு தொடங்கியிருக்கும் நிலையில் நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கும் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா, இந்தப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், தமிழ் கல்வி முறை பலவீனமாகும் என்பதுடன் மலேசியாவில் தமிழ் மொழியின் பயன்பாடு குறைந்து விடும் என்றும் எச்சரித்துள்ளார்.

முன்னாள் துணையமைச்சரான முருகையா மஇகா தேசிய உதவித் தலைவருமாவார். மலேசிய தமிழ் பள்ளிகள் மேம்பாட்டு அறக்கட்டளையின்  –  தலைவர் – மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஆகிய பொறுப்புகளிலும் முருகையா செயல்படுகிறார்.

“மிகவும் கவலைக்கிடமானது என்னவென்றால், இந்த நிலை தொடருமானால், எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகள் தானாகவே மூடப்படும் அபாயம் உள்ளது. இது இந்திய சமூகத்திற்கு ஒரு பெரிய இழப்பாக இருக்கும், ஏனெனில் தமிழ்ப்பள்ளிகள் வெறும் கல்வி மையமாக மட்டும் அல்லாது, நம் மொழி, கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாக்கும் முக்கியக் கட்டமைப்புகளாகவும் உள்ளன. எனவே, இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வுகாண இந்திய சமூகமும் அரசாங்கமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் முன்னாள் துணையமைச்சருமான முருகையா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்திய சமூகத்தின் பொறுப்பு

#TamilSchoolmychoice

“பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளில் சேர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் – இதன் தொடர்பில் அவர்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். இன்று பல தமிழ்ப்பள்ளிகள் கல்வி மற்றும் இணைபாட செயல்பாடுகளில் சிறந்து விளங்குகின்றன, ஆனால் இன்னும் சிலர் தவறானக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். அதை நாம் திருத்த வேண்டும். சமூகத் தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் இந்திய அரசியல் கட்சிகள் பெற்றோருக்கான விழிப்புணர்வு இயக்கங்கள் மற்றும் ஆதரவு திட்டங்களை மேலும் செயல்படுத்த வேண்டும். சமூகத்தின் பங்கேற்பும் இதில் அவசியம் இருக்க வேண்டும்” என்றும் முருகையா வலியுறுத்தினார்.

மேலதிகமாக கல்வி உதவித்தொகைகள், புத்தக உதவிகள், கூடுதல் வகுப்புகள் ஆகியவற்றை வழங்கி மேலும் பல மாணவர்களை தமிழ்ப்பள்ளிகளுக்கு அழைக்கும் ஊக்கமளிப்புத் திட்டங்கள் வேண்டும் எனவும் குறிப்பிட்ட முருகையா, மாணவர் சேர்க்கை குறைவதற்கான ஒரு முக்கிய காரணம், இந்திய சமூகத்தில் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதே என்றும் எனவே, ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் குறைந்தது ஆறு குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்பதன் மூலம் நமது எதிர்கால தலைமுறையின் மக்கள் தொகை பெருக்கத்தை உறுதி செய்யலாம் என்றும் கூறினார்.

அரசாங்கத்தின் பொறுப்பு

தமிழ்ப்பள்ளிகளைச் சிறப்பாக மாற்றுவதற்கு அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும், இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளில் சேர்க்க மேலும் ஊக்கமளிக்கப்படுவார்கள். அடிப்படை வசதிகளை தமிழ்ப்பள்ளிகளில் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

தமிழ்ப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த நிதியுதவிகள் மற்றும் மானியங்கள் மூலம் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், அதில் ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்துதல், பள்ளி கட்டமைப்பு மேம்படுத்துதல் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்துதல் அடங்கும்.

தமிழ்ப்பள்ளிகளை ஆதரிக்கும் கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.  கல்வி அமைச்சு தமிழ்ப்பள்ளிகளை ஊக்குவிக்கும் சிறப்பு கொள்கைகளை கொண்டுவர வேண்டும், குறிப்பாக கிராமப்புறங்களில் பள்ளிகளை அணுகுவதற்கான போக்குவரத்துக் கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த வேண்டும்.

இருமொழிக் கல்விமுறை (Bilingual Education)  செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழியுடன் மலாய் மற்றும் ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இதன் மூலம் மாணவர்கள் போட்டி நிலையைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இந்திய சமூகத்தை அதிக குழந்தைகள் பெற்றெடுக்க ஊக்குவிக்க அரசு நிதியுதவி, இலவசக் கல்வி, குழந்தை பராமரிப்பு வசதிகள் போன்ற உதவிகளை வழங்க வேண்டும். பெரிய குடும்பங்களுக்கு அரசாங்கம் சிறப்பு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் முருகையா தெரிவித்தார்.

“நான் முன்னாள் துணை அமைச்சர் மற்றும் மஇகா உதவித் தலைவர் என்று முறையில், எல்லா தரப்பினரும், குறிப்பாக இந்திய சமூகமே, உடனடியாக செயல்பட்டு தமிழ்ப்பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். கல்வி என்பது சமூக வளர்ச்சியின் அடித்தளம், எனவே தமிழ்ப்பள்ளிகளின் முக்கியத்துவம் குறையாமல் இருக்க நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். மேலும், இந்திய சமூகத்தின் மக்கள் தொகை வளர்ச்சியும் மிக முக்கியம். ஆகவே, இளைஞர்கள் தாமதிக்காமல் திருமணம் செய்து, பெரிய குடும்பங்களை உருவாக்க வேண்டும். நாம் இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால், நம் மொழி, கலாச்சாரம், கல்வி எல்லாம் மலேசியாவில் அழிந்து போகும் அபாயம் உள்ளது” என்றும் முருகையா குறிப்பிட்டார்.

இந்திய சமூகமும் அரசாங்கமும் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகள் தானாகவே மூடப்படும் நிலை ஏற்படும். அதை தவிர்க்க, நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் முருகையா வலியுறுத்தினார்.