
புதுடில்லி: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடப்பு தலைமை ஆணையர் ராஜீவ் குமாருக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்களைத் தொடர்ந்து இனி தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரும், தேர்தல் ஆணையர்களாக சுக்பிர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் செயல்படுவர்.
ஞானேஷ் குமார் எதிர்வரும் ஜனவரி 2029 வரை தலைமைத் தேர்தல் ஆணையராகச் செயல்படுவார். இந்தியாவின் அடுத்த பொதுத் தேர்தல் 2029 மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு பாஜக அரசாங்கத்தின் தவணைக்காலம் அப்போதுதான் முடிவுக்கு வரும்.
1988-ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக கேரளா மாநிலத்தில் இருந்து பணியாற்றத் தொடங்கியவர் ஞானேஷ் குமார்.
கடந்தாண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டார்.
உள்துறை அமைச்சரின் தலைமையின் கீழ் செயல்படும் தேர்வுக் குழு மூலம் ஞானேஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலையும், 2026-இல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களையும் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் கண்காணித்து வழிநடத்துவார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஞானேஷ் குமார் கான்பூர் ஐஐடி பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டத்தைப் பெற்றவர்.அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பெற்றவர்.