
கோலாலம்பூர் : “வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தியர் கூட்டுறவுக் கழகங்களுக்கு மானியங்கள் வழி டத்தோஸ்ரீ ரமணன் உதவி புரிகிறார் ” எனப் பாராட்டு தெரிவித்த நேசா கூட்டுறவுக் கழகத் தலைவர் டத்தோ சசிகுமார் பழனியப்பன் அதற்காக ரமணனுக்கு நேசா சார்பிலும் தனது தனிப்பட்ட சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“தொழில் முனைவோர், கூட்டுறவுத் துறை துணையமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் வித்தியாசமான முறையிலும் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கும் இந்தியர் கூட்டுறவுக் கழகங்களுக்கு அமைச்சின் மானியங்களின் வழி டத்தோஸ்ரீ ரமணன் பேருதவி புரிந்து வருகிறார்” என்றும் புகழாரம் சூட்டினார் நேசா கூட்டுறவு சங்கத் தலைவர் டத்தோ சசிகுமார் பழனியப்பன்.
டத்தோஸ்ரீ ரமணனின் இத்தகைய நடவடிக்கைகளுக்காக அவருக்கு நேசா கூட்டுறவுக் கழகத்தின் சார்பிலும் நாட்டிலுள்ள இந்தியர் கூட்டுறவு அமைப்புகளின் சார்பிலும் டத்தோ சசிகுமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
1922 முதல் இந்நாட்டில் கூட்டுறவு இயக்கங்கள் இயங்கி வந்தாலும், கூட்டுறவு அமைப்புகள் என்று வரும்போது இந்திய சமூகம் சார்ந்த கூட்டுறவு சங்கங்கள் முன்னோடியாகத் திகழ்ந்து வந்தாலும் அவற்றுக்கு நேரடியாக அரசாங்க மானியங்கள் மிக அபூர்வமாகவே கிடைத்திருக்கின்றன.
“இந்நிலையில் டத்தோஸ்ரீ ரமணன் துணையமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் பல வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் இந்தியர் கூட்டுறவு இயக்கங்களுக்கு உதவி புரிந்து வருகிறார். கடந்தாண்டு (2024) அக்டோபர் 13-ஆம் தேதி முதன் முறையாக இந்தியர் கூட்டுறவு சங்கங்களுக்கான மாநாட்டை கோலாலம்பூரில் சிறப்பாக நடத்தினார் ரமணன். அந்த மாநாட்டிலேயே கூட்டுறவு சங்கங்களுக்காக எப்போதும் போராடுவேன் என உறுதியளித்தார் ரமணன். அதற்கேற்ப, அதனை வெறும் வாய்ச் சொல்லாக இல்லாமல் செயலிலும் காட்டினார். மலேசிய கூட்டுறவு ஆணையம் (SKM) நிர்ணயித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அந்த மாநாட்டில் கலந்து கொண்ட கூட்டுறவு சங்கங்களுக்கு RM30,000 வரை சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 இந்தியர் கூட்டுறவு சங்கங்களுக்கு மலேசியக் கூட்டுறவு ஆணையம் மூலமாக 1.4 மில்லியன் ரிங்கிட் மானியம் ஒதுக்கீடு செய்துள்ளார்” என அறிக்கை ஒன்றின் வழி சசிகுமார் மேலும் தெரிவித்தார்.
ரமணன் முன்னெடுத்த முயற்சிகளின் மூலம் 6 இந்தியர் கூட்டுறவு சங்கங்கள் மொத்தமாக 175,600 ரிங்கிட் மானியத்தை பந்துவான் பக்தி மடானி திட்டத்தின் மூலம் பெற்றன. அதே வேளையில் மேலும் 2 கூட்டுறவுக் கழகங்களுக்கு 1.225 மில்லியன் ரிங்கிட் மலேசியக் கூட்டுறவுத் துறை ஆணையத்தின் சுழல் நிதி மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மானியங்கள் மூலம் இந்தியர்களின் கூட்டுறவு சங்கங்கள் மட்டுமின்றி பொதுவாக இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களும் விரிவடைந்திருப்பதோடு, தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
30 ஆயிரம் ரிங்கிட் மானியம் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட 6 கூட்டுறவு சங்கங்களில் நேசாவும் ஒன்று என்பதில் தாங்கள் பெருமிதம் கொள்வதாகவும் இதன் மூலம் நேசா கூட்டுறவுக் கழகம் சிறப்பாக செயல்படுகிறது என்ற கௌரவத்தையும் தாங்கள் பெற்றுள்ளதாகவும் டத்தோ சசிகுமார் குறிப்பிட்டார்.
மலேசிய வரலாற்றில் இந்தியர் கூட்டுறவு கழகங்களுக்கு இதுபோன்ற மானியம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
“டத்தோஸ்ரீ ரமணனின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கும், கூட்டுறவுத் துறையை வலிமைப்படுத்த அவர் எடுக்கவிருக்கும் எதிர்கால வியூகத் திட்டங்களுக்கும் குறிப்பாக இந்திய கூட்டுறவு அமைப்புகளுக்கு உதவ அவர் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் நேசா கூட்டுறவு சங்கம் எப்போதும் துணை நிற்கும்” என்றும் சசிகுமார் தனதறிக்கையில் தெரிவித்தார்.