Home Featured தமிழ் நாடு கூவத்தூர் விடுதியிலேயே தங்குகிறார் சசிகலா!

கூவத்தூர் விடுதியிலேயே தங்குகிறார் சசிகலா!

543
0
SHARE
Ad

panneer selvam-sasikala-bannerசென்னை – இன்று திங்கட்கிழமை மூன்றாவது முறையாக அதிமுகவில் தன்னை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க கூவத்தூரில் உள்ள கோல்டன் பே உல்லாச விடுதிக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் கூட்டி, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

யாரும் வற்புறுத்தி இங்கே தங்க வைக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றும் கூறிய சசிகலா, “நானே என்னுடைய மாற்று உடைகளோடும், இன்றிரவு இங்கேயே தங்கும் ஏற்பாடுகளோடும் வந்திருக்கிறேன். இங்கே பெண் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கியிருப்பதால், அவர்களோடு நானும் இங்கே தங்கப் போகிறேன்” என்று அனைவரும் ஆச்சரியப்படும்படி அறிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்களோடு, கலந்தாலோசனை செய்யவும், அவர்களுக்கு உற்சாகம் ஊட்டவும், தைரியம் அளிக்கவும் சசிகலா இன்றிரவு கூவத்தூரிலேயே தங்குகிறார் என்று கருதப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதன் தொடர்பிலான மேலும் சில புதிய செய்திகள் வருமாறு:

  • நாளை வழக்கு தனக்கு ஆதரவாக தீர்ப்பானால், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூவத்தூரில் இருந்து சென்னைக்கு வெற்றிப் பயணமாக ஊர்வலமாக சசிகலா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் சோலி சோராப்ஜி வழங்கியுள்ள சட்ட ஆலோசனையின்படி, ஆளுநர் ஓரிரு நாட்களுக்கு பதவியேற்பை ஒத்தி வைக்கலாம், ஆனால் அதற்கு மேல் ஒத்தி வைக்க அவருக்கு அதிகாரமில்லை எனக் கூறியுள்ளார்.
  • ஆனால், நடப்பு அரசாங்கத் தலைமை வழக்கறிஞரான முகுல் ரோகத்கி ஆளுநருக்கு வழங்கியுள்ள ஆலோசனையின்படி, சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி இரண்டு தரப்புகளும் நேரடியாக தங்களின் ஆதரவு பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
  • சசிகலா, காங்கிரஸ் இரண்டு தரப்புகளில் யாருக்கும் காங்கிரஸ் ஆதரவு தரப்போவதில்லை என தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
  • இதற்கிடையில் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டுமெனவும் மேலும் தாமதப்படுத்துவதால், சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசும் பேரங்கள் தொடரும் என்றும் கூறி, பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தொடுக்கப்பட்டுள்ளது.
  • சுப்ரமணிய சுவாமியோ இந்தப் பிரச்சனையில் கருத்து கூறும்போது, ஆளுநரின் அதிகாரத்தின்படி, யார் பெரும்பான்மையைக் காட்டும் தரப்பின் தலைவரோ அவரை முதல்வராகப் பதவியேற்கும்படி ஆளுநர் அழைக்க வேண்டும் என்றும் அதைச் செய்யாமல் அவர் காலம் கடத்துவது அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று சாடியிருக்கிறார்.

panneer selvam-at Tamil Nadu Secretariatஇன்று ஓ.பன்னீர் செல்வம் தலைமைச் செயலகம் வந்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்…

  • ஓ.பன்னீர் செல்வம் இன்று தமிழகத் தலைமைச் செயலகம் வந்து நடப்பு முதல்வர் என்ற முறையில் உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

-செல்லியல் தொகுப்பு