Home Featured கலையுலகம் ஆஸ்கார் சுவாரசியங்கள்: சிறந்த படம் பெயர் மாறிய குழப்பம்!

ஆஸ்கார் சுவாரசியங்கள்: சிறந்த படம் பெயர் மாறிய குழப்பம்!

817
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – இன்று காலை நடைபெற்ற (அமெரிக்க நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு) 89-வது ஆஸ்கார் விருதுகள் விழாவில் இதுவரை அதன் வரலாற்றில் இல்லாத அளவுக்கு முதன் முறையாக சிறந்த படத்திற்கான பெயரை மாற்றி அறிவித்ததால், மேடையிலேயே பெரும் குழப்பம் நேர்ந்தது.

சிறந்த படத்திற்கான விருது எப்போதுமே இறுதி விருதாக அறிவிக்கப்படும். ஆஸ்கார் விருதைப் பெறும் சிறந்த படத்திற்கான பெயரை அறிவிக்க பிரபல நடிகரும் இயக்குநருமான வாரன் பீட்டி (warren beatty) மற்றும் நடிகை ஃபே டன்எவே (faye dunaway) இருவரும் மேடைக்கு வந்தனர்.

oscar 2017-Jimmy Kimmel-warren beatyசிறந்த படப் பெயரை அறிவிக்கும் குழப்பத்தில் – வாரன் பீட்டி (வலம்) நிகழ்ச்சி அறிவிப்பாளர் ஜிம்மி கிம்மல் (இடம்)

#TamilSchoolmychoice

பெயரை அறிவிக்க சிவப்பு வண்ண கடித உறையைத் திறந்த வாரன் பீட்டி, தலையை ஆட்டிக் கொண்டே சற்று நேரம் தயங்கினார். பின்னர் அருகிலிருந்த நடிகை  டன்எவேயைப் பார்த்தார். கடித உறைக்குள் இருந்த விருதுக்கான சிறந்த படத்தின் பெயரை அறிவிக்க டன்எவேயிடம், வாரன் பீட்டி அட்டையைக் கொடுக்க சிறந்த படம் “லா லா லேண்ட்” என அறிவித்தார் டன்எவே.

லா லா லேண்ட் படக் குழுவினர் உடனடியாக மேடையேறி, தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவராக ஏற்புரையை வழங்க ஆரம்பித்தனர்.

சற்று நேரத்தில் மேடையில் சில சலசலப்புகள் ஏற்பட்டன. விழா ஏற்பாட்டாளர்கள் மேடைக்குச் சென்று ஏதோ தெரிவிக்க, லா லா லேண்ட் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஒலி பெருக்கி முன்னால் வந்து “மன்னிக்கவும். ஒரு தவறு நேர்ந்து விட்டது. சிறந்த படம் விருது மூன் லைட் என்ற படத்திற்கு கிடைத்திருக்கிறது. மூன் லைட் படக் குழுவினர் மேலே வாருங்கள்” என அழைத்தார்.

அனைவரும் தயக்கத்துடன் பார்க்க உடனே அவர் “இது ஜோக் அல்ல! உண்மைதான். தவறு நேர்ந்து விட்டது. மேலே வாருங்கள்” என மீண்டும் அழைத்தார்.

பின்னர், ஒலிபெருக்கி முன்னால் வந்த வாரன் பீட்டி, என்ன நேர்ந்தது என்பதை விளக்க விரும்புகிறேன் என்று கூறத் தொடங்கினார். “நான் கடித உறையைத் திறந்ததும் அதில் சிறந்த நடிகை ‘எம்மா ஸ்டோன், லா லா லேண்ட்’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. அதனால்தான் நான் முதலில் அறிவிக்கத் தயங்கினேன். கடித உறை மாறியிருந்தது எனக்குத் தெரியாது. நான் சக நடிகை டன்எவேயிடம் காட்டியதும் உடனே அவர் லா லா லேண்ட் என அறிவித்து விட்டார்” என்று கூறினார்.

பின்னர் நிகழ்ச்சியின் அறிவிப்பாளராகப் பணியாற்றிய ஜிம்மி கிம்மல் தவறுக்கு நானும் ஒரு காரணம் என மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

பெயர் மாறி அறிவிக்கப்பட்டாலும், முதலில் பெயர் அறிவிக்கப்பட்ட லா லா லேண்ட் படத் தயாரிப்பாளர் நாகரிகமாக மேடையில் முன்வந்து “மூன் லைட் படத் தயாரிப்பாளர்களும் எனது நண்பர்கள்தான். அவர்களுக்கு கிடைத்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி. இந்த ஆஸ்கார் விழா இவ்வாறு நிறைவடைந்ததில் மிக்க மகிழ்ச்சி” எனக் கூறியது பாராட்டத்தக்கதாகவும், நிலைமையை சுமுகமாக சமாளித்த விதமாகவும் அமைந்தது.

ஆஸ்கார் வரலாற்றில் இத்தகைய பெயர் அறிவிக்கும் குழப்பம் நினைவு தெரிந்து அண்மைய ஆண்டுகளில் நிகழ்ந்ததில்லை என்றும், இதுதான் முதன் முறை என்றும் கூறப்படுகிறது.

-செல்லியல் தொகுப்பு