Home Featured நாடு “பொதுத் தேர்தலில் பாதுகாப்பான தொகுதிகள் என எதுவும் இல்லை”

“பொதுத் தேர்தலில் பாதுகாப்பான தொகுதிகள் என எதுவும் இல்லை”

947
0
SHARE
Ad

mohan-vs-mic

கோலாலம்பூர் – “வரக்கூடிய 14-வது பொதுத்தேர்தலில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சிலாங்கூரில் ஒரு பாதுக்காப்பான தொகுதியிலும், துணைத்தலைவர் டத்தோ எஸ்.கே தேவமணி அவர்கள் பேராவில் உள்ள பாதுகாப்பான தொகுதியில் போட்டியிடவிருப்பதாக, “நம்பத்தகுந்த வட்டாரங்கள்” என்னும் கூற்றை அடிப்படையாக வைத்தே பிழைப்பு நடத்தி வரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்தல் போட்டியில் பாதுகாப்பான தொகுதி; பாதுகாப்பற்ற தொகுதி என்ற பாகுபாடுகள் ம.இ.காவுக்குக் கிடையாது. ம.இ.காவின் தேசியத் தலைவர் முன்னமே அறிவித்ததைப் போன்று 9 நாடாளுமன்றத்திலும் 19 சட்டமன்றத்திலும் ம.இ.கா பிரதிநிதிகள் போட்டியிடுவதில் எவ்வித மாற்றமுமில்லை. எந்தத் தொகுதியில் எந்த வேட்பாளரைக் களம் காண வைப்பது என்ற முடிவைத் தகுந்த நேரத்தில் தேசியத் தலைவர் அறிவிப்பார். அதற்கு முன்னதாகவே இவர் இந்தத் தொகுதியில்தான் போட்டியிடவிருக்கின்றார் என்ற பொய்யான தகவலைப் பரப்பி மக்களைக் குழப்பும் கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் குறிப்பிட்ட பத்திரிகைக்கு நினைவுறுத்த விரும்புகின்றேன்” என இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் மஇகா தேசிய தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் சாடியுள்ளார்.

subra-2“ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் எப்பொழுதும் போலவே அவருடைய சிகாமாட் தொகுதியில் செவ்வனவே சேவையாற்றி வருகின்றார் என்பதைத் தொகுதி மக்கள் உட்பட அனைவரும் அறிவர். அதேநேரத்தில், சிலாங்கூர் மாநில ம.இ.கா தொடர்பு குழுத் தலைவர் என்னும் அடிப்படையில் சிலாங்கூர் மாநிலத்தில் ம.இ.காவின் கீழ் இருக்கக்கூடிய தொகுதிகள் மட்டுமின்றி பிற மாநிலங்களில் ம.இ.காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் களம் இறங்கி வாக்காளர்கள் சந்திப்போடு பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை டாக்டர் சுப்ரா கண்டறிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சிலாங்கூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாக்காளர்கள் சந்தித்தார் என்பதற்காக அவர் அங்குள்ள தொகுதியில் பாதுகாப்பாகப் போட்டியிடவிருப்பதாக அர்த்தமாகி விடாது” என்றும் மோகன் தனது அறிக்கையில் விளக்கினார்.

#TamilSchoolmychoice

“அப்படியென்றால் பிரதமரும் தொகுதி மாறப் போகிறாரா?”

najib“அப்படியென்றால், நாட்டின் பிரதமர் அவர்கள் நாடு முழுவதும் களம் கண்டு வருவதால் அவருடைய பெக்கான் தொகுதியை விடுத்து பாதுகாப்பான தொகுதியைத் தேடுகிறார் என்று அர்த்தமாகி விடுமா?” என்றும் கேள்வி எழுப்பிய மோகன், “ம.இ.கா களம் காணவிருக்கும் அனைத்துத் தொகுதிகளையும் போட்டியிடுவதற்குப் பாதுகாப்பான தொகுதிகளாக உருமாற்றம் காண வைப்பதும் முன்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ம.இ.கா  தேசியத் தலைவரின் தலையாயக் கடமையாகும். அதன்பொருட்டு, இப்பொழுதே தேர்தல் இயந்திரங்களை முடுக்கிவிட்டு வாக்காளர்களை அடையாளம் காணும் முயற்சியில் தேசியத் தலைவர் இறங்கியுள்ளார். அவரோடு அந்தந்தத் தொகுதியைச் சார்ந்த ம.இ.கா உறுப்பினர்களும் சேவையாற்றி வருகின்றனர்” என்றும் மோகன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

“தொகுதி வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு தேசியத் தலைவருக்கு உண்டு. தொகுதி வேட்பாளர்களில் மாற்றம் தேர்தலுக்குத் தேர்தல் மாறுபடுவது இயல்பானது. அதற்கு அவர்களுடைய வயது, கல்வி, கட்சியில் அவர்கள் வகிக்கும் பதவி, அவர்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவு என இன்னும் பல காரணங்களைக் கொண்டு அதன் அடிப்படையில் சிறந்த வேட்பாளரைத் தேர்வு செய்யும் முடிவு தேசியத் தலைவர் கையிலேயே உள்ளது. அதற்கு முன்னதாகவே பொய்யான தகவல்களைப் பத்திரிகையில் பிரசுரித்து யாரும் தண்டல் வேலைகளைப் பார்க்க வேண்டாம்” என்றும் மோகன் கேட்டுக் கொண்டார்.

“பத்திரிகையாளர்கள் பத்திரிகைகளில் ஆருடங்களைக் கணித்து எழுதலாம்; ஆனால், பொய்யான தகவல்களைத் திரித்து எழுதலாகாது. அது பத்திரிகை தருமமும் மாண்பும் கிடையாது என்பது குறிப்பிட்ட பத்திரிகையாளருக்குத் தெரியாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கின்றது. தங்களது பத்திரிகை விற்பனையாக வேண்டுமென்பதற்காக தினசரி ம.இ.காவைப் பற்றி ஏதாவது ஒரு பொய்த்தகவலைத் தலையங்கத்தில் போட்டுக் களங்கத்தை ஏற்படுத்துவது குறிப்பிட்ட பத்திரிகைக்குப் பொழுது போக்காகிவிட்டது. அப்படி ம.இ.காவைப் பற்றி ஏதாவது ஒன்றை எழுதிதான் பத்திரிகை விற்பனையாகின்றது என்றால், அப்பத்திரிகையை வாழ வைத்துக் கொண்டிருப்பதில் ம.இ.காவுக்கு மகிழ்ச்சியே” என்றும் மோகன் மேலும் கூறியிருக்கிறார்.