Home Featured நாடு சுங்கத் துறையின் தலைமை இயக்குநராக சுப்ரமணியம் தேர்வு!

சுங்கத் துறையின் தலைமை இயக்குநராக சுப்ரமணியம் தேர்வு!

653
0
SHARE
Ad

subramaniam-customs-feature

புத்ரா ஜெயா – அரசாங்கச் சேவைகளில் இந்தியர்களுக்கான பதவி உயர்வுகள் போதுமான அளவில் கிடைப்பதில்லை என நெடுங்காலமாக நிலவி வரும் இந்திய சமுதாயத்தின் ஆதங்கத்தை ஓரளவுக்குத் தீர்த்து வைக்கும் வகையில், மிக முக்கியமான அரசாங்க இலாகாவான சுங்கத் துறையின் (கஸ்ட்ம்ஸ்) தலைமை இயக்குநராக ஓர் இந்தியரான டத்தோ சுப்ரமணியம் துளசி தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்.

அவரது நியமனம் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்தது என அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி அம்சா அறிவித்தார்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி அமுலாக்கத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் சுப்ரமணியம். 58 வயதான அவர் இந்தப் புதிய நியமனத்திற்கு முன்பு சுங்கத் துறையின் துணைத் தலைமை இயக்குநராக, அமுலாக்கப் பிரிவுக்கான பொறுப்புகளைக் கவனித்து வந்தார்.

சுங்க இலாகாவின் மூன்று துணைத் தலைமை இயக்குநர்களில் ஒருவராகச் செயல்பட்டு வந்த சுப்ரமணியம்,பதவி விலகிச் செல்லும் கசாலி அகமட்டுக்குப் பதிலாக பதவி ஏற்கிறார்.

“நிர்வாகம், வரி நிர்வாகம், அமுலாக்கம் ஆகிய துறைகளின் விரிவான அனுபவம் வாய்ந்த சுப்ரமணியம், தனது அனுபவம், திறமை, நேர்மை ஆகியவற்றின் துணையோடு, தனது கடமைகளை பொறுப்புடன் ஆற்றுவார். உலகத்தரத்துக்கு சுங்க இலாகா சேவைகளின் தரத்தை உயர்த்துவார்” என அலி அம்சா இந்த நியமனம் குறித்து விடுத்த அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்தார்.

1984-ஆம் ஆண்டில் சுங்க அமுலாக்க அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கி, கடந்த 34 ஆண்டுகளாக சுங்க இலாகாவில் பணியாற்றி வருகின்றார் சுப்ரமணியம்.

தொடர்ந்து சுங்க இலாகாவில் பல பதவிகளை அவர் வகித்திருக்கின்றார்.