கோலாலம்பூர் – சினிமா, அரசியல் இவை இரண்டிற்கும் இடையிலான தொடர்பும், அதில் ஏற்படும் முட்டல் மோதல்களும் தான் படத்தின் கரு. அரசியல்வாதிக்கு தொண்டர்கள் கூட்டம் இருப்பது போல், நடிகனுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால், அரசியல்வாதியைப் பின்பற்றுபவர்களில் அடிமட்டத் தொண்டன் வரை அதிகார பலம் சென்றுவிட, நடிகர்களைப் பின்பற்றும் ரசிகர்களோ வெறும் உணர்ச்சிகளால் மட்டுமே உந்தப்பட்டு, அதிகாரத்துடன் மோதுகிறார்கள்.
அந்த மோதலில் அவர்கள் அடையும் பிரச்சினைகளையும், இழப்புகளையும், ‘எங்கிட்ட மோதாதே’ என்ற பெயரில், 1980-களில், நெல்லை மாவட்டத்து, ரஜினி – கமல் ரசிகர்களை மையமாக வைத்து திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் ராமு செல்லப்பா.
கதைச்சுருக்கம்
நட்ராஜும், ராஜாஜியும் கட்டவுட் (பெரிய அளவிலான பதாகை) வரைவதில் கைதேர்ந்தவர்கள். தொழில் ரீதியாக இருவரும் ஒன்றாக இருந்தாலும், ரசிகன் என்ற வகையில், ரஜினி ரசிகராக நட்ராஜும், கமல் ரசிகராக ராஜாஜியும் இருந்து வருகின்றனர். தானு ஆர்ட்ஸ் என்பவரிடம் தொழில் பழகும் இருவரும், பின்னர் திருநல்வேலிக்கே சென்று சொந்தமாக கட்டவுட் வரையும் தொழில் தொடங்குகின்றனர்.
அந்த ஊரில் திரையரங்கு வைத்திருக்கும் அரசியல்வாதியான ராதாரவிக்கு, விசுவாசமான தொண்டனாக இருந்து வரும் விஜய் முருகனுக்கும், நண்பர்களான நட்ராஜ், ராஜாஜிக்கும் இடையில் திரையரங்கு முன் கட்டவுட் வைப்பதில் முட்டல் மோதல் தொடங்குகிறது.
இதனிடையே, ராஜாஜியின் தங்கையான சஞ்சிதா ஷெட்டிக்கும், நட்ராஜுக்கும் இடையில் காதல் மலர, அது ராஜாஜிக்குத் தெரிய வர, நண்பர்களான இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ராதாரவியும், விஜய் முருகனும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்கின்றனர்.
அரசியல்வாதியின் சூழ்ச்சியின் போது, வேறு வேறு நடிகர்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும், ரசிகன் என்ற முறையில் நட்ராஜும், ராஜாஜியும் எப்படி ஒன்றிணைந்து ராதாரவியின் சூழ்ச்சியை முறியடிக்கிறார்கள் என்பது தான் படத்தின் பிற்பாதி சுவாரசியம்.
ரசிக்க
ரஜினி ரசிகராக நட்ராஜும், கமல் ரசிகராக ராஜாஜியும் நன்றாக நடித்திருக்கிறாரகள். ரஜினி – கமல் ரசிகர்கள் என்பதற்காக, படத்தில் அவர்களைப் போலவே உடல்மொழிகளில் நடித்து நம்மை வெறுப்பேற்றாமல், இருவரும் அவரவர் இயல்பான உடமொழியிலேயே நடித்திருப்பது ரசிக்க வைக்கின்றது.
கதாநாயகிகளாக சஞ்சிதா ஷெட்டியும், பார்வதி நாயரும் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நடுத்தர வர்க்க குடும்பப் பெண்களைப் போல் தோற்றத்தில் வருகின்றனர். அந்தத் தோற்றத்திற்கு அவர்கள் இருவரும் கனக்கச்சிதமாக பொருந்தியிருப்பது சிறப்பு.
முற்றிலும், 80-ம் ஆண்டுகளில் நடக்கும் கதை, அதுவும் நெல்லை மாவட்டத்தில் நடப்பது என்பதால், மற்ற படங்களைக் காட்டிலும் ஒரு புதுமை இதில் இருக்கத் தான் செய்கிறது. 60, 70-களில், பிறந்தவர்களுக்கு இத்திரைப்படம் பழைய நினைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள், ரசிகர் மன்றங்களுக்கு இடையிலான நக்கல் நையாண்டிகளும், கட்டவுட் வரைபவர்களுக்குள் நகைச்சுவையாகப் பேசிக் கொள்வதும் ரசிக்க வைக்கின்றது. “டேய்.. உன் கலவை சிவாஜி நிறத்துக்கானது இல்ல. ஜெமினி கணேசனுக்கு தான் சரியா இருக்கும்”, “கமல் கட்டவுட் நல்லா இருக்கு டா.. ரஜினி மாதிரி நச்சுன்னு இருக்கு”, “இவன் என்னடா கமல் பாட்டப் போட்டு ரஜினி மாதிரி ஆடுறான்” இவை படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனங்களுக்கு உதாரணம்.
சங்கர நாராயணன் நடராஜனின் பின்னணி இசை தொடக்கம் முதல் காட்சிகளுக்கு வீரியம் கூட்டும் வகையில் மிகச் சிறப்பாக இருக்கிறது. பாடல்களும் படத்தோடு இணைந்து பார்க்கும் போது இனிமையாக இருக்கிறது.
அரசியல்வாதியாக ராதாரவியின் நடிப்பு அருமை. தனக்கே உரிய சிறப்பான நடிப்பை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதே அவருக்கு தொண்டனாக வரும் விஜய முருகன் வில்லனாக மிரட்டியிருக்கிறார்.
கணேஷ் சித்ராவின் ஒளிப்பதிவில் திருநெல்வேலியும், அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளும், 80-ம் ஆண்டுகளில் இருப்பதைப் போல் மிக அழகாகப் பதிவாகியிருக்கிறது.
முதல் பாதி சலிப்பு
முதல் பாதி முழுக்க ரஜினி, கமல் ரசிகர் மன்றம் அமைப்பது, கட்டவுட் வைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், திரையரங்குகளில் ரசிகர்கள் அடிதடி என காட்சிகள் சுவாரசியம் இன்றி, திரைக்கதை மெதுவாக நகர்வது படத்தின் மிகப் பெரிய பலவீனமாக இருக்கிறது.
ரசிகர்கள் பற்றிய கதை என்றாகிவிட்டது, சரி.. திரையரங்குகளில் நடக்கும் எவ்வளவோ சுவாரசியமான, நகைச்சுவையான விசயங்களை முதல்பாதியில் இணைத்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
அதே போல், ரசிகர்களுக்கு இடையிலான பிரச்சினைகளில் இருக்கும் உள்ளார்ந்த அரசியலை, இன்னும் கூட நுணுக்கமாக ஆராய்ந்து, வெளிப்படையாகக் காட்டியிருக்கலாம். ஆனால் பாலபிஷேகம், கட்டவுட்டின் உயரத்திற்குப் போட்டி என ஏற்கனவே நன்கு தெரிந்த விசயங்களைச் சுட்டிக் காட்டியிருப்பது கொஞ்சம் சலிப்பு தான். இரண்டாம் பாதியில் சில இடங்களில் திரைக்கதை வேகம் பிடித்தாலும் கிளைமாக்சில் மீண்டும் தொய்வடைகிறது.
மொத்தத்தில், ‘எங்கிட்ட மோதாதே’ – ரசிகர்களுக்கும், அரசியவாதிக்கும் இடையிலான பிரச்சினை, இன்னும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கலாம்.
-ஃபீனிக்ஸ்தாசன்