புத்ரா ஜெயா, செப். 4– அரச மலேசிய சங்கத்துறையின் மாநில இயக்குநர் உட்பட 22 பேர் கடத்தல் புகாரின் பேரில் ஊழல் தடுப்பு ஆணையத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் கிள்ளான் துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது மிகப்பெரிய சிகரெட் மற்றும் மதுபான கடத்தல் முறியடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 22 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.
இவர்களில் 12 பேர் சுங்கத்துறையைச் சேர்ந்தவர்கள் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) துணை இயக்குநர் முகமட் சுக்ரி அப்துல் தெரிவித்தார்.
கடத்தல் பொருட்கள் அனைத்தும் கிள்ளானில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
தடுத்து வைக்கப்பட்ட மற்றவர்கள் நிறுவன அதிபர்கள், அவர்களின் முகவர்கள் மற்றும் லோரி ஓட்டுநர்கள் ஆவர்.
தடுத்து வைக்கப்பட்ட அதிகாரிகள், கடத்தல் கும்பலை பல வழிகளில் பாதுகாத்து வந்ததுடன், வரி விலக்கு அளிக்கப்பட்ட கிள்ளான் துறைமுகத்தின் வசதிகளை முறைகேடாகவும் பயன்படுத்தி உள்ளனர்.
“இந்த நடவடிக்கையின் மூலம் இப்பகுதியில் சிகரெட் மற்றும் மதுபான கடத்தலில் ஈடுபட்டு வந்த மிகப்பெரிய கடத்தல் கும்பல் ஒடுக்கப்பட்டதாக நம்புகிறோம்,” என்று முகமட் சுக்ரி அப்துல் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பல நூறு மில்லியன் ரிங்கிட் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அண்டைய நாடுகளுக்கும் சிகரெட் மற்றும் மதுபானம் கடத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கடந்த ஓராண்டு காலமாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும், சிறப்பு நடவடிக்கை படையும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.