புது டெல்லி, செப்டம்பர் 4 – மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்து 100 நாட்கள் முடிந்து விட்டன. மோடி பதவியேற்பு விழாவுக்கு முதல் முறையாக சார்க் எனப்படும் தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை அழைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக பல புதியத் திட்டங்களை வெளியிட்டார் மோடி. பல சவால்களை எதிர்நோக்கி வரும் மோடி அரசின் 100 நாள் ‘பேசப்படும் சாதனைகளை பார்ப்போம்.
மோடி அரசின் 100 நாள் சாதனைகள்:
*பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்து வெளியுறவுக் கொள்கையில் புதிய திருப்பம் ஏற்படுத்தினார்.
*கருப்புப் பணத்தை மீட்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை உருவாக்கினார்.
*இருதரப்பு உறவை வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக பூடானுக்கு தனது முதலாவது பயணத்தை மோடி மேற்கொண்டார்.
*100 நாட்களுக்குள் தங்களது இலக்கு என்ன என்பதை வரையறுத்து செயல்பட அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.
*கோவாவில் இந்தியாவின் மிகப் பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யாவை பார்வையிட்டு கடற்படையினர் மத்தியில் உரையாற்றினார்.
*ஓய்வூதியத் திட்டத்துக்காக ரூ1,000 கோடி ஒதுக்கீடு, நர்மதா அணைக்கட்டின் நீர் தேக்கும் அளவை உயர்த்த அனுமதித்தார்.
*அரசு மருத்துவமனைகளில் இலவசமாக எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன் வழங்க முடிவு செய்தார்.
*பொருளாதார வளர்ச்சி 5.7% ஆக உயர்ந்தது. பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டை 49% ஆக உயர்த்தினார்.
*அமைச்சர்களின் உறவினர்களை அமைச்சில் ஊழியர்களாக நியமிக்கக் கூடாது என கட்டளையிட்டார்.
* கங்கை நதி தூய்மைக்காக ரூ2037 கோடி ஒதுக்கீடு செய்தார்.