கோலாலம்பூர் – வாழையடி வாழையாக, வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் மூத்த தலைமுறையினரோடு, இக்காலத் தலைமுறையினரை இணைத்து, இலக்கிய வாழ்வை இயல் வாழ்வாக்க வேண்டி அயலகத் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, எதிர்வரும் ஜூன் மாதம் 9,10,11, ஆம் நாள் ‘இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு’ சென்னையில் நடைபெறவுள்ளது என மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தொடர்புக் குழுத் தலைவர் பொன்.கோகிலம் அறிவித்திருக்கிறார்.
இம்மாநாட்டில் நாடு தழுவிய நிலையில் பல எழுத்தாளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவை டி.என் இராஜரத்தினம் கலையரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில், மலேசிய எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்க அழைக்கப்படுகின்றனர்.
மலேசிய எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில், 50 எழுத்தாளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். விமானச்சீட்டு, மாநாட்டுக் கட்டணம், தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து செலவுக்கு ஒருவருக்கு தலா 3,000 ரிங்கிட் ஆகும்.
மாநாட்டுக்குப் புறப்படும் நாள் : 8/6/2017 – 12/6/2017. ஆர்வமுள்ளவர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் அருள் ஆறுமுகம் அவர்களிடம் முன் பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு : 012 5006161.
எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் அறிக்கை
இதற்கிடையில் சென்னையில் நடைபெறும் அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்து தெரிவித்த செய்தியில், சிங்கையில் நடைபெற்ற தாயகம் கடந்த தமிழ் இலக்கிய மாநாட்டின் தொடர்ச்சியாக இந்த மாநாடு நடைபெறுவதாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
“நானும் எழுத்தாளர் சங்கத்திலிருந்து இன்னும் சிலரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறோம். 8.6.2017 ஆம் தேதி இரவு புறப்பட்டு, 12.6.2019 காலை சென்னையிலிருந்து
திரும்பும் வகையில் இந்த பயணம் அமையும். மாநாட்டு கட்டணம் நூறு அமெரிக்க டாலர். மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் விரும்பினால் சொந்தமாக பயண சீட்டை வாங்கிக் கொள்ளலாம். தங்குவதற்கும் சொந்தமாக ஏற்பாடு செய்து கொள்ளலாம். தங்குவதற்கும் பயணச்சீட்டுக்கும் விரம்புபவர்களுக்கு நாங்களும் ஏற்பாடு செய்து கொடுக்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொண்டால் அவர்களின் பெயரை பதிவு செய்ய நான் உதவி செய்வேன்” என்றும் பெ.இராஜேந்திரன் தனது செய்தியில் தெரிவித்திருக்கிறார்.