சென்னை: விஜயலட்சுமி என்ற நடிகை காவல் துறையில் வழங்கிய புகார்களின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் தன் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
சேலத்திலிருந்து விமானம் மூலம் வந்த அவர் காவல் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கிய பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
சம்பந்தப்பட்ட நடிகையின் பாலியல் வன்கொடுமை வழக்கில் சீமானிடம் விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக வளசரவாக்கம் காவல் நிலைய அதிகாரிகள் சீமான் வாக்குமூலம் வழங்க வரவேண்டுமென அவரின் இல்லம் சென்று அதற்கான அறிவிக்கையை (நோட்டீஸ்) வீட்டில் ஒட்டியிருந்தனர்.
அந்த அறிவிக்கையை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து கிழித்ததற்காக சீமானின் பணியாளர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதன் தொடர்பில் சீமானின் மனைவி கயல்விழி பத்திரிகையாளர்களைச் சந்தித்து காவல் துறையினரின் நடவடிக்கையைக் கடுமையாகச் சாடினார்.
காவல்துறை நடவடிக்கையை அநாகரீகம் என வர்ணித்த சீமான், ஒரு பத்திரிகையாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ‘அப்பா ஸ்டாலின்’ எனக் கிண்டலாகக் கூறி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
“ஒட்டப்பட்ட நோட்டீசை நாங்கள் படித்துவிட்டோம், கிழித்தோம். படித்தபிறகு அது எதற்காக? அதற்காக உள்ளே வந்து கதவை திறந்து காவலாளியையும் என் நிர்வாகியையும் அடித்தது அநாகரீகம்” என்றார் சீமான்.
இத்தனை நாள் வரை எனக்கும் அந்த நடிகைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதற்கான ஆதாரம் இருக்கிறதா என்றும் கேட்டுக் கொண்டிருந்த சீமான் முதல் முறையாக இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.