ஷா ஆலாம் – கடந்த மே 22-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தில் விசாரிப்பதற்காக 3 மலேசிய மாணவர்களை, கைது செய்ய முனைந்த மான்செஸ்டர் காவல் துறையினர், அந்த மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவுகளை உடைத்து, உள்ளே நுழைந்து அவர்களைக் கைது செய்திருக்கின்றனர்.
இதன் காரணமாக, அந்த மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிட் தெரிவித்திருக்கிறார்.
சில மணி நேரங்கள் தடுத்து வைக்கப்பட்டு, அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் சாஹிட் உறுதிப்படுத்தியுள்ளார். ஷா ஆலாமில் உள்ள பள்ளிவாசலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது சாஹிட் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
பாதிக்கப்பட்ட அந்த மூன்று மாணவர்களும் தற்போது மலேசியா ஹால் எனப்படும் இலண்டனில் உள்ள மலேசியாவுக்கு சொந்தமான கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வார இறுதி நாட்களில் தங்களின் பொழுதைக் கழிப்பதற்காக சக வெளிநாட்டு நண்பர்களையும், மாணவர்களையும் பேசுவதற்கு துணையாக அழைக்கும்போது மலேசிய மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இதன் காரணமாக, அங்குள்ள அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏதும் வராமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சாஹிட் பிரிட்டனில் பயிலும் மலேசிய மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதுபோன்ற வாராந்திர சந்திப்புகளை மலேசிய மாணவர்கள் நடத்தியதுதான் சில சந்தேகங்களை எழுப்பி, அதன் மூலம் தவறான புகார்களுக்கு வழிவகுத்திருக்கலாம் எனவும் சாஹிட் மேலும் கூறியிருக்கிறார்.
இருப்பினும் மலேசிய மாணவர்கள் மீதான மான்செஸ்டர் காவல் துறையினரின் விசாரணையில் தாம் திருப்தி கொண்டதாகவும் கூறியிருக்கும் சாஹிட், தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் மலேசியா பிரிட்டனின் காவல் துறையுடன் இணைந்து செயல்படும் என்றும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
22 உயிர்களைப் பலிவாங்கிய மான்செஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
சல்மான் அபெடி என்ற 22 வயது நபர் இந்தத் தாக்குதலை நடத்திய தற்கொலைத் தாக்குதல்காரன் என நம்பப்படுகின்றது.
மலேசிய மாணவர்கள் ஏதும் அறியாத அப்பாவிகள் என்றும் இவர்களை சல்மான் அபெடி தனது நோக்கங்களுக்காக இவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.