புதுடில்லி – கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு, டில்லி நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ஜாமீனில் விடுதலை வழங்கியது.
தினகரனுடன் கைது செய்யப்பட்ட மல்லிகார்ஜூனாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்குப் பெறுவதில் இலஞ்சம் வழங்க முற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தினகரனுக்கு உடந்தையாக இருந்ததாக மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார்.
அவர்களின் ஜாமீன் மனு இன்று 4-வது முறையாக விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் 5 இலட்சம் ரூபாய் செலுத்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நீதிமன்றம் அனுமதித்தது.
சில கட்டுப்பாடுகளையும் அவர்களுக்கு நீதிமன்றம் விதித்திருக்கிறது. அவர்களின் அனைத்துலகக் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, வெளியூர்களுக்கு செல்வதற்கு முன்னர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் – என்பது போன்ற கட்டுப்பாடுகள் தினகரனுக்கும், மல்லிகார்ஜூனாவுக்கும் விதிக்கப்பட்டிருக்கின்றன.
டிடிவி தினகரனின் விடுதலையைத் தொடர்ந்து அதிமுகவின் இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் சில திருப்பங்கள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.