புதுடில்லி: ஜன.17-சமையல் எரிவாயு கொள்கலன்களை 6-லிருந்து 9 ஆக உயர்த்தி வழங்கிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கு (சிலிண்டருக்கு) கட்டுப்பாட்டு (ரேஷன்) முறை கொண்டு வரப்பட்டது.
இதனால் மானியத்துடன் கூடிய இல்லங்களுக்கான கொள்கலன்கள் ஆண்டுக்கு 6 மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து 6-இல் இருந்து 9 ஆக உயர்த்தி இனி வழங்கப்படும் என மத்திய அரசு கூறியது. ஆனால் அப்போது குஜராத், இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடந்ததால் தேர்தல் ஆணையம் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தது.
இந்நிலையில் இப்போது தேர்தல்கள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை 6-லிருந்து 9ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு தேர்தல் கமிஷனும் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் இந்த புதிய நடைமுறை அமலாகிறது.
இதே போல், டீசல் விலையையும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருவது குறிப்பிடத்தக்கது.