கோலாலம்பூர் – மலேசியாவிலுள்ள இந்து ஆலயங்களின் தேசிய மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் நடந்தேறியது. மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இந்த மாநாட்டை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
“இந்நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் ஆகம முறைப்படி வழிநடத்தப்பட வேண்டும். எதிர்காலங்ளில் சிறப்பான அளவில் அவற்றை வழி நடத்த சில முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என டாக்டர் சுப்ரா தனது திறப்புரையில் கேட்டுக் கொண்டார்.
இந்து ஆலயங்களுக்கான கையேடு வெளியிடப்படுகிறது…அருகில் துணையமைச்சர் சரவணன் (இடது) முன்னாள் இந்து சங்கத் தலைவர் டத்தோ வைத்தியலிங்கம் (வலது)
இந்து ஆலயங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய அம்சங்களாக பின்வரும் சில அம்சங்களை டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்:-
- இந்து ஆலயங்களை வழிநடத்தும் பொறுப்பும், அதனைக் தற்காக்கும் உரிமையும் இந்துக்களுக்கு உள்ளது என்பதை ஒவ்வோர் இந்துவும் உணர வேண்டும்;
- ஆலய நிர்வாகங்கள் நாட்டின் சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும்.
- ஆலயங்கள் முறையாகச் சமயப் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும்;
- ஆலயங்கள் சமூக, சமுதாயத் தொண்டு செய்வது குறித்து ஆராய வேண்டும்;
- ஆலய நிர்வாகங்கள் காலத் தேவைக்கு ஏற்ப நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து ஆராய வேண்டும்;
- இந்து ஆலயங்களில் சமூக, சமுதாய சேவை மையங்களை உருவாக்க வேண்டும்.
மேலும் அரசாங்கம் அறிவித்துள்ள புளுபிரிண்ட் எனப்படும் இந்தியர்களுக்கான பத்தாண்டு வியூக செயல் திட்டத்தின் கீழ், இந்து ஆலயங்களில் சமூக, சமுதாய மையங்களை உருவாக்கும் முயற்சியில் தற்போது “செடிக்” ஈடுபட்டுள்ளது என்றும் டாக்டர் சுப்ரா அறிவித்தார். “அதன் முன்னோடித் திட்டத்திற்காகத் தற்போது மூன்று ஆலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்திட்டம் எதிர்பார்த்த பயனைச் சமூகத்தில் ஏற்படுத்துமானால், இத்திட்டம் கட்டங் கட்டமாக நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்” என டாக்டர் சுப்ரா தனதுரையில் மேலும் கூறினார்.
பின்னர், இந்த மாநாட்டில் டாக்டர் சுப்ரா தேசிய ஆலய வழிகாட்டித் தொடர்பான கையேட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
ஆலயங்களுக்கான தேசிய மாநாட்டில் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம். சரவணன், மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ ஆர். எஸ். மோகன், மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ அ. வைத்தியலிங்கம், ஆகியோருடன் நாடு முழுமையிலுமிருந்து ஆலயப் பிரதிநிதிகளும் திரளாகக் கலந்து கொண்டனர்.