சிங்கப்பூர் – சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், இன்று வியாழக்கிழமை, தமது 5 புதிய ஏ380எஸ் விமானங்களில் செய்யப்பட்டிருக்கும் புதிய வசதிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
அதன் படி, முதல்வகுப்பு அறைகளில் உள்ள இருக்கைகள் 12 -லிருந்து 6 ஆகக் குறைக்கப்பட்டிருப்பதோடு, அவ்விருக்கைகளை மெத்தை போல் மடக்கி உறங்கவும் முடியும். இவை அனைத்தும் கீழ் தளத்தில் இருந்து மேல் தளத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றன.
அதேபோல், மேல் தளத்தில் மொத்தம் 78 வர்த்தக வகுப்பு இருக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. முந்தைய கட்டமைகளில் அவை 60 மற்றும் 86 ஆக இருந்தன. தற்போது செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தால் வர்த்தக வகுப்புப் பயணிகளுக்கு கூடுதலான இடம் கிடைத்து வசதியாக அமர்ந்து பயணிக்கலாம்.
பிரிமியம் சிக்கன வகுப்பில் மொத்தம் 44 இருக்கைகளுக்கும் தனியாக கேபின் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதேவேளையில் சிக்கன வகுப்புகளில் தொடுதிரை, கால்களை வைக்கத் தேவையான இடவசதி, நன்றாக சாய்ந்து அமரக் கூடிய வகையிலான இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்திருக்கிறது.