கோலாலம்பூர் – முன்னாள் மலேசியப் பிரதமரும், மலேசியாவில் அதிக ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையையும் பெற்றவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல தந்தி தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார்.
அந்நேர்காணல் நேற்று சனிக்கிழமை தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
தந்தி தொலைக்காட்சியின் பிரபல செய்தியாளர் ஹரிஹரன் எழுப்பிய முக்கியக் கேள்விகளுக்கு மகாதீர் பதிலளித்தார்.
அவற்றில், மலேசியாவில் ஆட்சி மாற்றம் நிகழாமல் இருப்பது, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் புகார்கள், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுடன் கைகோர்த்திருப்பது உள்ளிட்ட பல கேள்விகள் மகாதீரிடம் கேட்கப்பட்டன. அவற்றிற்கு மகாதீர் அளித்த பதில்களை இங்கே காணலாம்:
ஹரிஹரன்: ஜனநாயக நாடான மலேசியாவில் ஏன் ஒருமுறை கூட ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை?
மகாதீர்: முக்கியக் காரணம் எதிர்கட்சிகளிடம் ஒற்றுமை இருந்ததே இல்லை. அதனால் ஆளும் அரசை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. ஆளும் அரசு 13 வெவ்வேறு கட்சிகளின் கூட்டணியைக் கொண்டது. நான் பிரதமராக இருந்தவரை நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றது. நல்ல வளர்ச்சி இருந்தது. தரமான கல்வி இருந்தது. உள்கட்டமைப்பு சரியாக இருந்தது. பிரிட்டிஷ் விட்டுச் சென்றதை விட சிறப்பான நாடாக மாற்றிக் காட்டினேன். சுதந்திரத்திற்குப் பிறகு மிக வேகமான வளர்ச்சியை மலேசியா அடைந்தது. அப்படி இருக்கும் போது மக்கள் ஏன் ஆட்சி மாற்றத்தை விரும்பப் போகிறார்கள்.
ஜனநாயகம் என்றால் ஆட்சி மாறி கொண்டே இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ், ஐரோப்பிய அறிவு ஜீவிகள் உலக நாடுகளுக்குச் சொல்லியிருக்கிறார்கள். ஆட்சி மாற்றங்களில் சிக்கல் இருக்கிறது. இடையூறு இருக்கிறது. மலேசிய மக்கள் அப்படிப்பட்ட இடையூறுகளை விரும்பவில்லை.
ஹரிஹரன்: உங்க சீடரான இன்றைய பிரதமருக்கு எதிராக எதிர்கட்சியோடு சேர்ந்து போர் கொடி தூக்கியிருக்கிறீர்களே அது ஏன்?
மகாதீர்: நான் தேர்ந்தெடுத்த இன்றைய பிரதமர் நஜிப் மீது பல ஊழல் புகார்கள் இருக்கின்றன. 680 மில்லியன் டாலர் அவரது கணக்கில் இருந்திருக்கிறது. ஒரு பிரதமர் இப்படி இருக்கலாமா?
ஹரிஹரன்: உங்க ஆட்சி காலத்தில் கூட உங்கள் மீது நிறைய ஊழல் புகார்கள் இருந்தன. இன்றைய பிரதமர் மீது என்னென்ன ஊழல் புகார்கள் சுமத்தப்படுகிறதோ அதே புகார்கள் உங்கள் மீதும் சுமத்தப்பட்டன.
மகாதீர்: ஆமாம்.. எதிர்கட்சிகள் என் மீது சில ஊழல் புகார்களை சுமத்தினர்.
ஹரிஹரன்: இதையே இன்றைய பிரதமரும் சொல்லிக் கடந்துவிடலாம் இல்லையா?
மகாதீர்: எனக்கு 92 வயது வாழ்வின் கடைசி நாட்களில் இருக்கிறேன். முற்றிலும் ஓய்வு எடுக்க வேண்டிய நேரம். ஆனால் இந்த நாட்டை அழித்து வருகிறார்கள். அதனால் மீண்டும் களமிறங்கி இருக்கிறேன்.
ஹரிஹரன்: உங்களாலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டு, உங்களாலேயே கைது செய்யப்பட்ட அன்வார் இப்ராகிம்முடன் தற்போது கைகோர்த்திருக்கிறீர்களே அது ஏன்?
மகாதீர்: காரணம் வெளிப்படையானது. எங்கள் இருவருக்கும் ஒரே நோக்கம். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நாங்கள் இருவரும் இணைந்தால் தவிர இந்த ஆட்சியை ஒழிக்க முடியாது. இந்த நோக்கத்திற்கு முன்னால் எங்கள் கருத்துவேறுபாடுகள் ஒரு பொருட்டே இல்லை.
ஹரிஹரன்: நீங்கள் செய்வது சந்தர்ப்பவாதம் இல்லையா?
மகாதீர்: எனக்கு என்ன நோக்க இருக்க முடியும்? எனக்கு எந்த அரசியல் கனவுகளும் இல்லை. நான் இந்த நாட்டோட பிரதமராக 22 வருடங்கள் இருந்திருக்கிறேன்.
இவ்வாறு மகாதீர் தெரிவித்திருக்கிறார்.
தந்தித் தொலைக்காட்சியின் முழு நேர்காணல்: