கோலாலம்பூர் – மலேசியாவின் மிகப் பெரிய இந்தியப் பணக்காரர்களில் ஒருவரான டான்ஸ்ரீ ஏ.கே.நாதன் பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டிருக்கும் எவர்செண்டாய் கொர்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனம் சவுதி அரேபியாவின் அதிகாரபூர்வ அரசு எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவில் இருந்து எண்ணெய் வயல் கட்டுமானக் குத்தகை ஒன்றைப் பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு சிற்றரசில் அமைக்கப்பட்ட எவர்செண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான எவெர்செண்டாய் ஆப் ஷோர் ஆர்எம்சி (Eversendai Off Shore RMC) நிறுவனத்திற்கு 180 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய இந்தக் குத்தகை வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்பில் அந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி சவுதி அராம்கோவில் இருந்து இத்தகைய குத்தகையைப் பெறும் முதல் மலேசிய நிறுவனமாக எவெர்செண்டாய் திகழ்கிறது.
தற்போது பெறப்பட்டிருக்கும் குத்தகையோடு சேர்த்து இதுவரையில் இந்த ஆண்டுக்கு மட்டும் 1.56 பில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள குத்தகைப் பணிகளை எவெர்செண்டாய் கொண்டிருக்கிறது.
மொத்தம் 2.3 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான குத்தகைகளையும் எவெர்செண்டாய் தன் கைவசம் தற்போது கொண்டிருக்கிறது.
சவுதி அராம்கோ அடுத்த 10 ஆண்டுகளில் 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை எண்ணெய் வளத் தொழில்களிலும், கட்டுமானங்களிலும் முதலீடு செய்யவிருப்பதால், மேலும் பல குத்தகைகளை சவுதி அராம்கோவிலிருந்து பெற முடியும் எனவும் எவெர்செண்டாய் நம்பிக்கை கொண்டிருக்கிறது.
“எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்துறையில் எவர்செண்டாய் மிகக் குறுகிய காலமே செயல்பட்டு வந்தாலும், சிறந்த தரச் சான்றிதழ்களை இந்தத் துறையில் பெற்றிருக்கிறது. குறிப்பாக ஐக்கிய அரபு சிற்றரசில் உள்ள ‘ராஸ் அல் கைமா’ என்ற எண்ணெய் வள கட்டுமானத் திட்டம் இரண்டரை ஆண்டுகளாக மட்டுமே செயல்பட்டு வந்தாலும், இந்தத் துறைக்கான உயர்ந்த தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது” என்றும் எவெர்செண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டான்ஸ்ரீ ஏ.கே.நாதன் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்.