கோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல இந்திய கோடீஸ்வரர் டான்ஸ்ரீ ஏ.கே.நாதனின் தலைமையில் இயங்கும் முன்னணி கட்டுமான நிறுவனமான எவர்செண்டாய் பெர்ஹாட் நிறுவனம், தனது வணிகத்தை தாய்லாந்துக்கும் விரிவுபடுத்தவிருக்கின்றது.
இரும்புப் பாளங்கள் உருவாக்குதல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எனப்படும் இரும்பு தொடர்புள்ள தொழில்கள், இயந்திர நிர்மாணிப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் எஸ்-கோன் என்ஜினியரிங் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம், தாய்லாந்தில் கால்பதிக்க எவர்செண்டாய் எண்ணம் கொண்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் உட்கட்டமைப்பில் பங்குகொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் மூலமாக தாய்லாந்து நாட்டில் எங்களின் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கு எங்களுக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான வாய்ப்பாக இதனைக் கருதுவதாக எவர்செண்டாய் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரும், குழும நிர்வாக இயக்குநருமான டான்ஸ்ரீ ஏ.கே.நாதன் (படம்) தெரிவித்துள்ளார்.
தென்கிழக்காசியா முழுமைக்கும் தங்களின் வணிகத்தை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தங்களின் தாய்லாந்து விரிவாக்கம் அமைவதாகவும் நாதன் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கான நிதி எவர்செண்டாய் நிறுவனத்தின் சொந்தக் கையிருப்பில் இருந்து செலவழிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் எஸ்-கோன் நிறுவனத்தின் பங்குக் கொள்முதல் முழுமையடைந்ததும், அந்த நிறுவனம் எவர்செண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமாகச் செயல்படத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.