சிங்கப்பூர் – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானப் பணியாளர்களில் ஒருவர் விமானத்தில் தங்கம் கடத்தியதற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதனை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
சிங்கப்பூரில் இருந்து டெல்லி சென்ற தங்களது எஸ்கியூ402 விமானத்தில் விமானப் பணியாளராகச் சென்ற அவரிடமிருந்து 1,048 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.
உடனடியாக அவ்விமானப்பணியாளரைக் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அந்நபர், டெல்லியில் உள்ள பிரபல தங்கும்விடுதியில் உள்ள முகவரிடம் அந்நகைகளை தான் ஒப்படைக்க வேண்டும் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
1, 048 கிராம் எடையுடய அந்நகைகளை அவர் கழுத்திலும் கைகளில் அணிந்து கொண்டு சென்றிருக்கிறார் என சுங்க இலாகாவைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இதற்காக சன்மானமாக அந்நபர் 500 டாலர் (1,486 ரிங்கிட்) பெறவிருந்தார் என்றும், இதே போன்ற குற்றத்தை கடந்த ஜனவரி 8-ம் தேதியும் அந்நபர் செய்திருக்கிறார். ஆனால் அப்போது அவர் சிக்கவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
அண்மையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் விமானப் பணியாளர் 5 லட்சம் அமெரிக்க டாலரைக் கடத்தி டெல்லி விமான நிலையத்தில் சோதனையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.