கோலாலம்பூர் – மலேசியாவில் உடல்உறுப்புகள் தானம் செய்த 220,000 மலேசியர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததாகக் கூறியிருக்கும் பிரபல தொழில்நுட்ப இணையப் பக்கமான லோவ்யாட்.நெட் நிர்வாகிகளுக்கு மலேசியக் காவல்துறை விசாரணை வரும்படி கடிதம் அனுப்பியிருக்கிறது.
கூட்டரசு வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு இச்சம்பவத்தை விசாரணை செய்யவிருப்பதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஃபுசி ஹாருன் தெரிவித்திருக்கிறார்.
இரண்டு முறை இது போன்ற தகவல் கசிவு தொடர்பான செய்திகள் அந்த இணையப் பக்கத்தில் இருந்து வந்திருப்பதை ஃபுசி சுட்டிக்காட்டினார்.
“இதற்கு முன்பு, அதே இணையப்பக்கம் தான் 56 மில்லியன் டெல்கோ பயனர்களின் தகவல் கசிந்ததாகக் கூறியது. தற்போது அதே இணையப்பக்கம் அடுத்த தகவல் கசிவை வெளியிட்டிருக்கிறது. எனவே, இதற்கு முன்பு தகவல் கிடைத்த இடத்திலிருந்து தான் மீண்டும் தகவல் கிடைத்திருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தவிருக்கிறோம்” என்று ஃபுசி தெரிவித்திருக்கிறார்.
நேற்று செவ்வாய்க்கிழமை, லோவ்யாட்.நெட் வெளியிட்ட செய்தியில், உடல் உறுப்புகள் தானம் செய்த 220,000 மலேசியர்களின் பெயர், அடையாள அட்டையின் எண், முகவரி, தொலைப்பேசி எண் உட்பட பல்வேறு தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது இணையவாசிகள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது குறிப்பிடத்தக்கது.