Home நாடு ராசா தொகுதி ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் பகாவ் சட்டமன்றத்திற்கு மாற்றம்

ராசா தொகுதி ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் பகாவ் சட்டமன்றத்திற்கு மாற்றம்

824
0
SHARE
Ad
தியோ கோக் சியோங் – நடப்பு ராசா நாடாளுமன்ற உறுப்பினர்

சிரம்பான் – நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் சிரம்பான் மற்றும் ராசா என இரண்டு தொகுதிகளில் ஜசெக மீண்டும் போட்டியிடுகிறது.

ராசா நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் ஜசெகவின் தியோ கோக் சியோங் மீண்டும் அங்கே போட்டியிடாமல் பகாவ் சட்டமன்றத்திற்கு மாற்றப்படுகிறார் என ஜசெக அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

இந்த மாற்றம் நெகிரி செம்பிலான் மாநிலத்தைக் கைப்பற்றும் ஜசெகவின் தேர்தல் வியூகமாகப் பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

காரணம், தியோ கோக் சியோங் பகாவ் சட்டமன்றத்திற்குப் புதியவரல்ல. 2008 பொதுத் தேர்தலில் 637 வாக்குகள் பெரும்பான்மையில் ஜசெக சார்பில் பகாவ் சட்டமன்றத்தைக் கைப்பற்றியவர் அவர். பகாவ் வட்டாரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் தியோ கோக் சியோங்.

அடுத்து வந்த 2013 பொதுத் தேர்தலில் இதே பகாவ் சட்டமன்றத் தொகுதியை ஜசெகவின் சியூ செ யோங் 5,136 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி கொண்டார். சியூ செ யோங் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேறு ஒரு தொகுதியில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகாவ் தொகுதியில் தியோ கோக் சியோங் வெற்றி பெற்று, நெகிரி செம்பிலான் மாநிலத்தை பக்காத்தான் கூட்டணியும் கைப்பற்றினால் அவர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜெம்போல் நாடாளுமன்றத்தின் கீழ் பகாவ் சட்டமன்றம்

டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட்

பகாவ் சட்டமன்றம் ஜெம்போல் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. ஜெம்போல் நாடாளுமன்றத் தொகுதியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெர்சாத்து கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

ஜெம்போல் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் அம்னோவின் டான்ஸ்ரீ முகமட் இசா பின் அப்துல் சமாட், பெல்டா தலைவராக இருந்து அதனால் எழுந்த ஊழல் சர்ச்சைகளினால் மீண்டும் அதே தொகுதியில் முகமட் இசா நிறுத்தப்படுவாரா என்ற ஐயமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜெம்போல் நாடாளுமன்றத் தொகுதியை பெர்சாத்து கட்சி வென்றெடுக்க ஜசெகவின் சார்பில் பகாவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகும் தியோ கோக் சியோங் தனது பிரச்சாரத்தின் மூலம் பெருமளவில் உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், இதே ஜெம்போல் தொகுதியின் கீழ்தான் மஇகா போட்டியிடப் போகும் ஜெரம் பாடாங் சட்டமன்றத் தொகுதியும் வருகிறது. 2013-இல் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற மாணிக்கம் லெட்சுமணன் மீண்டும் இங்கே நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2013 புள்ளி விவரங்களின்படி ஜெம்போல் நாடாளுமன்றத் தொகுதியில் 60 விழுக்காடு மலாய் வாக்காளர்களும், 25 விழுக்காடு சீன வாக்காளர்களும், 13 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் இருக்கின்றனர். மற்றவர்கள் 2 விழுக்காடாக இருக்கின்றனர்.

பகாவ் சட்டமன்றத்தில் 64 விழுக்காட்டு வாக்காளர்கள் சீனர்களாவர்.

எனவே, பகாவ் சட்டமன்றத்தில் ஜசெகவின் அனுபவம் வாய்ந்த தியோ கோக் சியோங் போட்டியில் குதிப்பதால், ஜெம்போல் நாடாளுமன்றத் தொகுதியில் இனி அரசியல் வெப்பம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்