ஜாகர்த்தா – இந்தோனிசியாவின் லொம்போக் தீவில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்த வேளையில், ஒரு மலேசியப் பெண்மணியும் அந்த சம்பவத்தில் உயிரிழந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.39 மணியளவில் தொடங்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 30-க்கும் மேற்பட்ட அதிர்வுகள் ஏற்பட்டன.
சுற்றுப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இந்தோனிசியத் தீவான லொம்போக்கில் உள்ள ரிஞ்சானி மலையில் ஏறுவதற்காக சென்ற குழுவில் மலேசியரான 30 வயது சித்தி நூர் இஸ்மாவிடா இடம் பெற்றிருந்தார். கிழக்கு லொம்போக்கில் உள்ள ரிஞ்சானி மலை, குமுறிக் கொண்டிருக்கும் ஓர் எரிமலையாகும். இந்த மலையை ஏறுவதற்காகத் திட்டமிட்டிருந்த குழுவில் இடம் பெற்றிருந்த 17 பேர் கொண்ட மலேசியக் குழுவில் மரணமடைந்த சித்தி நூர் இஸ்மாவிடாவும் ஒருவராவார்.
அவரது நல்லுடலை மலேசியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஜாகர்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகம் தற்போது ஈடுபட்டிருக்கிறது.
மலேசியக் குழுவில் இடம் பெற்றிருந்த அறுவர் காயமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரிஞ்சானி மலை இந்தோனிசியாவின் இரண்டாவது உயரமான மலையாகும். ரிஞ்சானி தேசியப் பூங்காவின் ஒரு பகுதியாக இந்த மலை அமைந்திருக்கிறது.
சுமார் 160 பேர் இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்திருப்பதோடு, ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்திருக்கின்றன.