இலண்டன் – சனிக்கிழமை (29 செப்டம்பர்) நியூயார்க்கிலிருந்து இலண்டன் வந்தடைந்த பிரதமர் துன் மகாதீர், மறுநாள் உடனடியாக பிரிட்டனுக்கானத் தனது இரண்டாம் கட்ட அலுவல் வருகையைத் தொடர்ந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (30 செப்டம்பமர்) லோட்டஸ் கார் நிறுவனம் குறித்த வணிக நிலவரங்கள், அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மகாதீர், தனிப்பட்ட விளக்கங்கள் பெற்றார். உயர்தரக் கார்கள், பந்தயங்களில் ஈடுபடும் கார்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் லோட்டஸ் ஆகும்.
கீலி எனப்படும் சீனாவின் செஜியாங் கீலி ஹோல்டடிங்ஸ் நிறுவனம் மலேசியாவின் புரோட்டோன் நிறுவனத்தின் 49.9 விழுக்காடு பங்குகளைக் கொள்முதல் செய்திருப்பதோடு, லோட்டஸ் நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளையும் கொள்முதல் செய்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் மலேசியாவின் டிஆர்பி ஹைகோம் நிறுவனத்திற்கு (DRB-Hicom) சொந்தமானதாகும்.
மகாதீருக்கு வழங்கப்பட்ட விளக்கத்தின்போது, லோட்டஸ் நிறுவனத்தினால் ஆகக் கடைசியாகத் தயாரிக்கப்பட்ட புதிய இரகக் காரும் மகாதீர் பார்வையிடக் காட்டப்பட்டது என நம்பப்படுகிறது.
லோட்டஸ் மற்றும் புரோட்டோன் நிறுவனங்களின் முன்னாள் தலைவராக மகாதீர் செயல்பட்டார்.
மகாதீருக்கான விளக்கமளிப்புக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களில் தொடர்புடைய மலேசியாவின் டான்ஸ்ரீ சைட் மொக்தார் மற்றும் டிஆர்பி ஹைகோம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ சைட் பைசால் அல்பார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விளக்கமளிப்புக்கு முன்பாக இலண்டனில் கீலி நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய இரக மின்சார வாடகைக் கார் (London electric taxi) ஒன்றையும் மகாதீர் பார்வையிட்டார்.