Home நாடு மகாதீர் : “எனது மூதாதையர்கள் இந்தியர்கள்தான். அதைக் கூற நான் வெட்கப்படவில்லை”

மகாதீர் : “எனது மூதாதையர்கள் இந்தியர்கள்தான். அதைக் கூற நான் வெட்கப்படவில்லை”

182
0
SHARE
Ad

கோலாலம்பூர் — வழக்கு ஒன்றில் இன்று (ஆகஸ்ட் 27) கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி வெட்கப்படவில்லை என்று தெரிவித்தார்.  ஆனால் தான் இன்னும் மலாய் இனத்தவர் என்று வலியுறுத்தினார்.

99 வயதான டாக்டர் மகாதீர், மலேசியாவின் அரசியலமைப்பின்படி தான் மலாய் இனத்தவராக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் சாட்சியமளித்தார்.

“எனக்கு இந்திய இரத்தம் இருப்பதாக சொல்ல நான் வெட்கப்படவில்லை. ஆனால் அது நான் மலாய் இல்லை என்பதற்கு அர்த்தமல்ல,” என்று அவர் இன்றைய நீதிமன்ற விசாரணையின்போது கூறினார்.

#TamilSchoolmychoice

பின்னர் அவர், தான் எங்கு சென்றாலும் — பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட இடங்களில் — அங்குள்ள மக்கள் தன்னை தங்களில் ஒருவராக உரிமை கொண்டாடுவார்கள், ஆனால் அத்தகைய உரிமை கோரல்கள் குறித்தும் தான் “சங்கடப்படவில்லை” என்றார்.

“மகாதீர் அனாக் லெலாகி இஸ்கந்தர் குட்டி” என்பது அவரது உண்மையான பெயர் என்று 2017 ஜூலை 30 ஆம் தேதி துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி கூறிய கருத்துக்களுக்கு எதிராக டாக்டர் மகாதீர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் அவர் தனது தரப்பு வாதங்களை முன்வைக்கும் வகையில் சாட்சியமளித்தார்.

நூல் ஒன்றில் மகாதீரின் தந்தை ஜாவி இனத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டிருப்பது குறித்து வழக்கறிஞர் கேட்டபோது “என்னைப் பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன, ஆனால் அவற்றின் உள்ளடக்கங்கள் துல்லியமாக இல்லாதபோது அவற்றுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

மாறாக, டாக்டர் மகாதீர் தனது தந்தை “முகமது பின் இஸ்கந்தர்” – சுத்த மலாய் இனத்தவராக பதிவு செய்யப்பட்டுள்ளார் – என்றும், பினாங்கில் அவர் பிறந்தார் என்றும் கூறினார். “இஸ்கந்தர் குட்டி” என்பது அவரது தந்தையின் மற்றொரு பெயர் அல்ல என்றும் மகாதீர் கூறினார்.

தனது தந்தையின் பெயரில் உள்ள “இஸ்கந்தர்” என்ற வார்த்தை தனது தாத்தாவின் பெயரான “இஸ்கந்தர்” -ஐக் குறிக்கிறது என்று அவர் கூறினார், பின்னர் தனது தாத்தா “இஸ்கந்தர் குட்டி” என்று அழைக்கப்பட்டார் என்பதையும் மறுத்தார்.

இது குறித்த பதிவுகள் எதுவும் இல்லாததால், தனது தாத்தா அல்லது கொள்ளுத் தாத்தா இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்தாரா என்பது தனக்குத் தெரியாது என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.

டாக்டர் மகாதீர் இதைப் பற்றி தனது தந்தையுடன் ஒருபோதும் விவாதித்ததில்லை என்றும், அவரது தந்தை டாக்டர் மகாதீரிடம் தந்தையின் கடந்த காலத்தைப் பற்றி ஒருபோதும் சொல்லவில்லை என்றும் கூறினார்.

தனது 10 உடன்பிறப்புகளில் இளையவராகவும் உயிரோடு எஞ்சியிருக்கும் ஒருவராகவும் இருக்கும் டாக்டர் மகாதீர், தனது மற்ற எல்லா உடன்பிறப்புகளும் “பின்” அல்லது “பிந்தி முகமது இஸ்கந்தர்” என்ற பெயரைப் பயன்படுத்தினர், ஆனால் தனது பெயர் “பின் முகமது” என்று கூறினார். ஆனால் சிலர் அவரை “மகாதீர் முகமது இஸ்கந்தர்” என்று அழைத்ததாகவும் அவர் கூறினார்.

தனது வம்சாவளி பற்றி தான் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை என்றும், தனது தந்தையின் பெயர் முகமது பின் இஸ்கந்தர் என்பதில் திருப்தி அடைந்ததாகவும் டாக்டர் மகாதீர் கூறினார்.

“எனது வம்சாவளி பற்றி நான் ஒருபோதும் ஆர்வம் காட்டவில்லை அல்லது யாரிடமும் ஆராய்ச்சி செய்யச் சொல்லவில்லை,” என்று அவர் கூறினார்.

பின்னர், டாக்டர் மகாதீர் கூறுகையில்: “அரசியலமைப்பின் 160-வது பிரிவின் வரையறையின்படி, நான் ஒரு மலாய் இனத்தவன், எனது நோக்கம் எனது இனத்தின் நலன்களைப் பாதுகாப்பதே” என்றார்.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 160 இன் கீழ், “மலாய்” என்பது இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர், வழக்கமாக மலாய் மொழியில் பேசுபவர், மலாய் பழக்கவழக்கங்களுக்கு இணங்குபவர் என்று பொருள்படும்.

2022 ஜூலை 20-ஆம் தேதியன்று கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது வழக்கில், டாக்டர் மகாதீர், சாஹிட் ஹாமிடி இழப்பீடு செலுத்த வேண்டும் என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், மேலும் இத்தகைய அவதூறு கருத்துக்களை சாஹிட் மீண்டும் கூறுவதைத் தடுக்க நீதிமன்ற உத்தரவு வேண்டும் என்றும் கோருகிறார்.

நீதித்துறை ஆணையர் கான் டெச்சியோங் முன்னிலையில் இந்த வழக்கு நடைபெறுகிறது.