குவா மூசாங் : கிளந்தான் குவா மூசாங்கிலுள்ள அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் பெரிக்காத்தான் கூட்டணி தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீது இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
குற்றத்தை மறுத்த முஹிடின் யாசின் விசாரணை கோரினார்.
நீதிபதி நிக் முகமட் தார்மிசி நிக் முகமட் ஷூக்ரி வழக்கை செவிமெடுத்தார். கிளாந்தான் பெல்டா பெராசு பகுதியில் முஹிடின் யாசின் ஆற்றிய உரை தொடர்பில் அவர்மீது தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த பொதுத் தேர்தலில் 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்கள் இருந்தும் முன்னாள் மாமன்னர் தன்னை பிரதமராக நியமிக்காதது குறித்து முஹிடின் யாசின் தனதுரையில் சாடியிருந்தார்.
அரசாங்கத் தரப்பு முஹிடின் யாசினுக்கான ஜாமீன் தொகை 20 ஆயிரம் ரிங்கிட்டாக நிர்ணயிக்க வேண்டுமென வாதிட்டது. தொடர்ந்து இதுபோன்ற உரைகளை ஆற்ற முஹிடினுக்கு தடைவிதிக்கும்படியும் அரசாங்கத் தரப்பு வலியுறுத்தியது.
நீதிபதி 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் தொகையாக நிர்ணயித்தார். எனினும் இதுபோன்ற வாசகங்களை முஹிடின் யாசின் பேசக் கூடாது என்ற தடையை விதிக்கவில்லை.
வழக்கின் அடுத்த விசாரணைக்கான தேதி நவம்பர் 4 என நிர்ணயிக்கப்பட்டது.