Home நாடு மஸ்ஜிட் இந்தியா பகுதியில் தோன்றிய இன்னொரு சாலைக் குழி! அதிகாரிகள் அதிர்ச்சி!

மஸ்ஜிட் இந்தியா பகுதியில் தோன்றிய இன்னொரு சாலைக் குழி! அதிகாரிகள் அதிர்ச்சி!

566
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில்  சாலையோரக் குழியில் தவறி விழுந்த விஜயலெட்சுமி என்ற இந்திய நாட்டைச் சேர்ந்த பெண்மணியை இதுவரை தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இன்னொரு சாலையோரக் குழி தோன்றி, அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இந்த இரண்டாவது சாலைக் குழி தோன்றிய சம்பவம் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 28) அதிகாலை 2.30 மணியளவில் நடந்தது. நேற்றிரவு நிகழ்ந்த கடுமையான மழைப் பொழிவுடன் பலமாக வீசிய புயல்காற்று காற்று இது நேர்ந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாதிருக்க அந்தப் பகுதியில் பாதசாரிகள் நுழைவதற்கு தடைகள் போடப்பட்டன.

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) விஜயலெட்சுமி என்ற 48 வயது பெண்மணி தவறுதலாக 8 மீட்டர் ஆழமுள்ள சாலையோரக் குழியில் விழுந்ததைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணி 6-வது நாளாகத் தொடரும் நிலையில் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. எனினும் அவரின் நிலைமை தெரியும்வரை அவரைத் தேடும்பணி நிறுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணியின் குடும்பத்தினருக்கான குடிநுழைவு (விசா) கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குழிக்குள் விழுந்த பெண்மணியின் செருப்புகள் மட்டும் கிடைத்த நிலையில் விஜயலெட்சுமியைத் தேடும் பணிகளில் மேலும் தீவிரம் காட்டும் விதத்தில் குறுக்கிடும் பாறைகளை உடைப்பதற்கும், உடைபட்ட பாறைத் துகள்களை அகற்றுவதற்கும், அதிக சக்திவாய்ந்த இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் பொதுமக்கள் மஸ்ஜிட் இந்தியா பகுதியைத் தவிர்க்க முற்பட்டுள்ளதால், அங்கு வணிகங்கள் பாதிக்கப்பட்டதாக அங்கு வணிகம் செய்பவர்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன.

இந்நிலையில் இரண்டாவது சாலையோரக் குழி தோன்றியுள்ளதால் அங்கு அடிக்கடி செல்லும் பொதுமக்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.