Home நாடு டாயிம் சைனுடின் மீதான விசாரணைகள் – வழக்குகள் கைவிடப்படுமா?

டாயிம் சைனுடின் மீதான விசாரணைகள் – வழக்குகள் கைவிடப்படுமா?

145
0
SHARE
Ad
துன் டாயிம் சைனுடின்

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் நேற்று புதன்கிழமை (நவம்பர் 13) காலை 8.21 மணிக்கு தனது 86-வது வயதில் பெட்டாலிங் ஜெயா அசுந்தார மருத்துவமனையில் காலமானதைத் தொடர்ந்து அவரின் இறுதிச் சடங்குகள் நேற்றே நடைபெற்று மாலை 6.10 மணியளவில் புக்கிட் கியாரா இஸ்லாமிய மையக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

முன்னதாக அவருக்கு இறுதி மரியாதை செலுத்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் டாயிமின் இல்லம் வந்தார். தனது நீண்ட கால விசுவாசமிக்க நண்பரை இழந்து விட்டதாக மகாதீர் அனுதாபம் தெரிவித்தார். மகாதீருடன் அவரின் மனைவி சித்தி ஹாஸ்மாவும் உடன் வந்தார். சுமார் அரை மணி நேரம் டாயிம் இல்லத்தில் மகாதீர் இருந்தார்.

டாயிமுக்கு இறுதி மரியாதை தெரிவிக்க வந்தவர்களில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப், பெர்சாத்து துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாம்சா சைனுடின், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், பெர்சாத்து உதவித் தலைவர் அகமட் பைசால் அசுமு, மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமட் பைசால் வான் அகமட் கமால் ஆகியோரும் அடங்குவர்.

#TamilSchoolmychoice

அரசாங்கத்தின் சார்பில் டாயிமின் கடந்த கால சேவைகள்  அங்கீகரிக்கப்படுவதாக அரசாங்கப் பேச்சாளர் தொடர்புத் துறை அமைச்சர் பாமி பாட்சில் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் தெரிவித்த அனுதாபத்தில் டாயிம் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

மற்ற சில அமைச்சர்களும் டாயிம் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தனர்.

எனினும் இப்போது அனைவரின் மனங்களிலும் எழுந்துள்ள கேள்வி – மக்களிடையே விவாதிக்கப்படும் விவகாரம் – டாயிம் மீதான விசாரணைகளும், வழக்குகளும் முடிவுக்கு வருமா அல்லது டாயிம் மறைந்தாலும் அவரின் குடும்பத்தினர் மீதான விசாரணைகள் தொடருமா? என்பதுதான்.

இதுகுறித்து அரசாங்க வழக்கறிஞர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார் என்றும் அவ்வாறு முடிவெடுக்க மேலும் ஓரிரு வாரங்கள் ஆகலாம் என்றும் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அசாம் பாக்கி தெரிவித்தார்.